ஜல்லிக்கட்டில் சீறி பாய்ந்து வெற்றியை குவித்த காளை உயிரிழப்பு: தேம்பி அழுத முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர்
அதிமுக முன்னாள் அமைச்சரான விஜயபாஸ்கரின் வெள்ளை கொம்பன் காளை வயது மூப்பு காரணமாக உயிரிழந்துள்ளது.
விராலிமலை தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான விஜயபாஸ்கர் காளைகள் வளர்ப்பதில் அதிகமான ஆர்வம் கொண்டவர். மதுரை ஜல்லிக்கட்டில் இவரது காளைகள் தோல்வி என்பதை சந்தித்த சரித்திரமே இல்லை.
அந்த அளவிற்கு அனைத்து போட்டிகளிலும் சீறி வந்து வீரர்களை நடுநடுங்க வைத்துள்ளளது. விஜயபாஸ்கரில் கொம்பன் காளை சில வருடங்களுக்கு முன்பு ஜல்லிக்கட்டில் சீறி வந்த கொம்பன் காளை தடுப்பு மரத்தில் மோதி தலையில் பலத்த அடிபட்டு பரிதாபமாக உயிரிழந்தது.
இதனையடுத்து, தங்கள் வீட்டில் செல்லமாக வளர்த்த கொம்பனுக்குத் தோட்டத்திலேயே சமாதி அமைத்து விஜயபாஸ்கர் தினசரி வழிபட்டு வருகிறார்.
இந்நிலையில் தான் வளர்த்துவந்த மற்றொரு காளையான வெள்ளை கொம்பன் வயது மூப்பு காரணமாக நேற்று இரவு உயிரிழந்துள்ளது. இதனையடுத்து, முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் உள்ளிட்ட ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள் காளைக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார்.
இதன் பின்னர் வெள்ளைக் கொம்பன் காளை ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு இறுதி சடங்குகள் நடைபெற்று அவரது தோட்டத்தில் புதைக்கப்பட்டது.