இரவு முழுவதும் தேம்பி தேம்பி அழுத விஜய்.. எதற்காக தெரியுமா?
தளபதி விஜய் நடித்துள்ள 'ஜன நாயகன்' திரைப்படம் இன்று (ஜூலை 23) உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களின் உற்சாக வரவேற்பைப் பெற்று வருகிறது.
நடிகராக இருந்து அரசியல் களத்தில் அடியெடுத்து வைத்துள்ள விஜய்யின் கடைசிப் படமாகக் கருதப்படும் இந்தத் திரைப்படம் பேசுபொருளாக இருக்கும் நிலையில், அவரது ஆரம்பகால வாழ்க்கையைப் பற்றிய பழைய பேட்டி ஒன்று சமூக வலைதளங்களில் மீண்டும் வைரலாகி வருகிறது.

அந்தப் பேட்டியில், விஜய்யின் நெருங்கிய நண்பரும் நடிகருமான சஞ்சீவ், இன்று உச்ச நட்சத்திரமாகத் திகழும் விஜய் தனது முதல் படத்தின் தோல்வி விமர்சனங்களால் எவ்வளவு மனவேதனை அடைந்தார் என்பதை நெகிழ்ச்சியுடன் நினைவுகூர்ந்துள்ளார்.
சஞ்சிவ் பகிர்ந்த நெகிழ்ச்சி தருணம்
விஜய்யின் அறிமுகப் படமான 'நாளைய தீர்ப்பு', அவரது தந்தை எஸ்.ஏ. சந்திரசேகர் இயக்கத்தில் வெளியானது. கீர்த்தனா, ஈஸ்வரி ராவ், ஸ்ரீவித்யா உள்ளிட்ட பலர் நடித்திருந்த இந்தப் படம் வெளியாகியபோது எதிர்பார்த்த வரவேற்பைப் பெறவில்லை.

அதோடு, சில முன்னணி இதழ்களில் வெளியான கடுமையான விமர்சனங்களும் இளம் நடிகரான விஜயை ஆழமாகப் பாதித்ததாக சஞ்சீவ் கூறியுள்ளார்.
அவர் குறிப்பிடுகையில், "விஜய் மிகவும் அழுதார்... சொல்லப்போனால், அந்த இரவு முழுவதும் அழுதார். அறிமுக நாயகனாக இருக்கும் ஒருவருக்கு கடுமையான விமர்சனங்கள் வருவது எளிதாக ஏற்றுக்கொள்ள முடியாத விஷயம். அதுவும் முன்னணி இதழிலிருந்து வந்தால் அந்த வலி இன்னும் அதிகமாக இருக்கும்.

அப்போது விஜய்க்கு வெறும் 20 வயதுதான். திரையுலகில் தன்னை நிரூபிக்க போராடிக்கொண்டிருந்த அந்த வயதில், எதிர்மறை விமர்சனங்களை எதிர்கொள்வது மிகவும் சவாலான அனுபவமாக இருந்ததாக குறிப்பிட்டுள்ளார்.
"20 வயதில் யாராக இருந்தாலும் இப்படிப்பட்ட சூழ்நிலைகளால் மனம் உடையும். ஆனால், இன்றைய அனுபவம் வாய்ந்த விஜய்யாக இருந்திருந்தால், அந்த விமர்சனங்களை மிகவும் முதிர்ச்சியுடன் எதிர்கொண்டிருப்பார்," என்றும் சஞ்சீவ் தெரிவித்தார்.

அதே நேரத்தில், காலம் எப்படி மாறியது என்பதையும் அவர் சுட்டிக்காட்டினார். தொடக்கத்தில் கடுமையாக விமர்சித்த அதே ஊடகங்கள், பின்னாளில் விஜயை தங்களது அட்டைப்படத்தில் வெளியிட அவரது ஒப்புதலுக்காகக் காத்திருந்ததாகக் கூறிய சஞ்சீவ், "அதுவே விஜய்யின் உழைப்புக்கும் வளர்ச்சிக்கும் மிகப் பெரிய சான்று அல்லவா?" என்று பெருமிதத்துடன் குறிப்பிட்டது தற்போது மீண்டு்ம் இணையத்தில் வைரலாகியுள்ளது.

இதற்கிடையில், விஜய்யின் 'ஜன நாயகன்' திரைப்படம் தற்போது திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது. ஹெச். வினோத் இயக்கியுள்ள இந்தப் படத்தில் பூஜா ஹெக்டே, பாபி தியோல், மமிதா பைஜு உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். நடிகராக விஜய்யின் இறுதிப் படமாகக் கருதப்படும் இந்தத் திரைப்படம் இன்று வெளியாகி ரசிகர்களின் பலத்த வரவேற்பை பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |