ஹீரோவாகப் போகும் விஜய் மகன் சஞ்சய்? - எதிர்பார்ப்பில் ரசிகர்கள்
ஹீரோவாக விஜய் மகன் சஞ்சய்யை படத்தில் நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாக செய்திகள் சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.
நடிகர் விஜய் மகன் சஞ்சய்
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் விஜய். இவருக்கென்று தனி ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. நடிகர் விஜய்க்கு ஜேசன் சஞ்சய் என்ற மகனும், திவ்யா சாஷா என்ற மகளும் உள்ளனர். அட்லி இயக்கத்தில் விஜய் நடித்த தெறி படத்தில் கவுரவத் தோற்றத்தில் வந்தார் திவ்யா சாஷா.
ஆனால், சஞ்சய்க்கு அப்பா போல் நடிக்க ஆசை கிடையாதாம். தாத்தா போல் படத்தை இயக்கத்தான் ஆசையாம். இதற்காக அவர் படங்களை இயக்குவது குறித்து வெளிநாட்டில் படித்துள்ளார்.
சஞ்சய் குறும்படங்களை இயக்கி வருகிறாராம். சமீபத்தில் சஞ்சய் இயக்கிய ஆங்கில குறும்படம் சமூக வலைதளத்தில் வெளியானது.‘
ஹீரோவாகப் போகும் விஜய் மகன் சஞ்சய்?
இந்நிலையில், நடிகர் விஜய் மகன் சஞ்சய் ஹீரோவாக நடிக்கப்போவதாக சமூகவலைத்தளங்களில் தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
புச்சி பாபு சனா இயக்கத்தில் வைஷ்ணவ் தேஜ், க்ரித்தி ஷெட்டி, விஜய் சேதுபதி உள்பட பலர் நடிப்பில் வெளிவந்த படம் ‘உப்பேனா’. இப்படம் 2021ம் ஆண்டு வெளியாகி ரூ.100 கோடிக்கு மேல் வசூல் சாதனை படைத்தது.
தற்போது, இந்தப் படத்தை தமிழ் ரீமேக்கில் ஜேசன் சஞ்சய்யை நடிக்க வைக்க படக்குழுவினர் விரும்புகிறார்களாம். இதற்காக ஜேசன் சஞ்சயிடம் பேச்சுவார்த்தை நடந்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
இப்படத்தில் ஜேசனுக்கு ஜோடியாக க்ரித்தி ஷெட்டியையே நடிக்க வைக்க திட்டமிட்டுள்ளனராம். இப்படத்தில் நடிக்க ஜேசன் சஞ்சய் ஓகே சொல்ல வேண்டும் என்று விஜய் ரசிகர்கள் ஆவலுடன் உள்ளனர். ஆனால் ஓ.கே. சொல்வாரா, இல்லையா என்று பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.