அசைவ உணவுக்கு இணையான சத்துக்களை வழங்கும் சைவ உணவுகள் என்னென்ன?
புரட்டாசி மாதம் தொடங்கியுள்ள நிலையில் பலரும் அசைவ உணவுகளைத் தவிர்த்து சைவ உணவுகளை மட்டுமே சாப்பிடுகின்றனர்.
இதுபோன்ற நேரங்களில் உடலுக்குத் தேவையான அனைத்து ஊட்டச்சத்துக்களும் கிடைக்கும் வகையில் உணவுகளைத் தேர்ந்தெடுத்து சாப்பிடுவது அவசியம்.
அசைவ உணவுகளில் கிடைக்கும் சத்துக்களுக்கு இணையான ஊட்டச்சத்துக்கள் நிறைந்த பல்வேறு சைவ உணவுகளும் உள்ளன.
இவற்றைத் தினசரி உணவில் சேர்த்துக்கொள்வதன் மூலம் ஊட்டச்சத்து குறைபாடுகளைத் தவிர்க்க உதவலாம்.
அந்தவகையில், அசைவ உணவுக்கு இணையான சத்துக்களை வழங்கும் சைவ உணவுகளை குறித்து பார்க்கலாம்.
1. ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள்
ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் மூளை மற்றும் உடல் ஆரோக்கியத்திற்கு முக்கியமானவை. குறிப்பாக, மீன் வகைகளில் இந்த சத்து அதிகமாக உள்ளது.
சைவ உணவுகளில் வால்நட்ஸ், சியா விதைகள் மற்றும் ஆளி விதைகள் ஆகியவற்றில் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் உள்ளன.

2. லீன் புரோட்டீன்
கொழுப்பு குறைந்த புரோட்டீன் சிக்கன் போன்ற அசைவ உணவுகளில் கிடைக்கிறது. அதேபோல், சைவ உணவுகளிலும் புரோட்டீன் நிறைந்த உணவுகள் உள்ளன.
பாலில் இருந்து தயாரிக்கப்படும் பன்னீர் மற்றும் சோயாவில் இருந்து தயாரிக்கப்படும் டோஃபு ஆகியவை புரோட்டீன் சத்துக்கான சைவ உணவு உணவுகளாகும்.

3. கொலாஜன்
கடல் உணவுகளில் அதிகம் உள்ள கொலாஜன் உடலில் உள்ள தோல், எலும்புகள் மற்றும் மூட்டுகளின் ஆரோக்கியத்திற்கு முக்கியமான புரதமாகும்.
சைவ உணவுகளில் சிட்ரஸ் பழங்கள், பெர்ரி பழங்கள், நட்ஸ் மற்றும் விதைகள் ஆகியவை கொலாஜன் உற்பத்திக்குத் தேவையான ஊட்டச்சத்துக்களை வழங்குகின்றன.

4. கொழுப்புள்ள புரோட்டீன்
மட்டன் உள்ளிட்ட இறைச்சி உணவுகளில் புரோட்டீன் மற்றும் கொழுப்பு காணப்படுகின்றன.
இதற்கு மாற்றாக மீல் மேக்கரை சேர்த்துக்கொள்ளலாம். இதில் புரோட்டீன் சத்து அதிகமாக உள்ளது.

5. இரும்புச்சத்து
உடலின் ஆரோக்கியத்திற்கு அவசியமானது இரும்புச்சத்து அசைவ உணவுகளில் மட்டன், முட்டை மற்றும் சிக்கன் போன்றவற்றில் இரும்புச்சத்து காணப்படுகிறது.
சைவ உணவுகளில் கீரைகள், பச்சைக் காய்கறிகள், விதைகள், நட்ஸ், பருப்பு வகைகள் மற்றும் உலர் பழங்கள் ஆகியவற்றில் இரும்புச்சத்து உள்ளது.
