பெண்கள் - சிறுநீர்ப்பாதை தொற்றை தவிர்ப்பது எப்படி?
பெண்களில் அதிகளவில் தொற்றுக்கு உள்ளாகும் சிறுநீர்ப்பாதை தொற்றை தவிர்ப்பது எப்படி என்பது குறித்து விளக்கம் அளித்துள்ளார் பொது நல மருத்துவர் Dr.அ.ப.ஃபரூக் அப்துல்லா.
அவரது பதிவிலிருந்து,
வலது மற்றும் இடது புறம் இருக்கும் சிறுநீரகங்களில் உருவாகும் சிறுநீர் - சிறுநீர்க்குழாய் ( யுரீட்டர் URETER) வழியாக கீழிறங்கி சிறுநீர்ப்பையில் ( யூரினரி ப்லேடர் - URINARY BLADDER) தேக்கப்பட்டு அங்கிருந்து சிறுநீர் வெளியேற்றும் குழாயான யுரீத்ரா வழியாக வெளியேற்றப்படுகிறது.
இந்த சிறுநீர்ப்பாதையில் கிருமித் தொற்று ஏற்படும் நிலை - சிறுநீர்ப்பாதை நீர்த்தொற்று ( URINARY TRACT INFECTION) என்று அழைக்கிறோம்.
இதில் சிறுநீர்ப்பை மற்றும் யுரீத்ராவில் தொற்று ஏற்படுவதை "கீழ் சிறுநீர்ப்பாதை தொற்று" Lower URINARY TRACT INFECTION என்றும் அதுவே யூரிட்டர் மற்றும் சிறுநீரகங்களில் கிருமித் தொற்று உண்டாவதை "மேல் சிறுநீர்ப்பாதை தொற்று" Upper URINARY tract infection என்றும் வகுக்கிறோம்.
-குளிர் நடுக்கத்துடன் காய்ச்சல்
- அடிவயிற்று வலி
- நீர்க்கடுப்பு
- சிறுநீர் கழிக்கும் போது எரிச்சல்
போன்றவை இந்த நோயின் அறிகுறிகள்.
பொதுவாக கிருமித் தொற்று யூரித்ரா வழியாக மேலேறி சிறுநீர்ப்பை சிறுநீர்க்குழாய் வழியாக சிறுநீரகங்களுக்கு செல்லும்.
இதில் கீழ் சிறுநீர்ப்பாதை தொற்றாக இருக்கும் போதே அடையாளம் கண்டு சிகிச்சை பெற்றால் சிறுநீரகங்கள் வரை தொற்று செல்லாமல் தடுக்க முடியும்.
ஆண்களையும் பெண்களையும் ஒப்பிடும் போது பெண்களுக்கு சிறுநீர்ப்பாதை தொற்று ஏற்படும் வாய்ப்பு அதிகமாக உள்ளது.
இதற்கான காரணம் உடற்கூறியல் ரீதியாக ஆண்களை விடவும் பெண்களின் யுரீத்ரா - நீளத்தில் சிறியது.
மேலும் பெண்கள் சிறுநீர் கழிக்கும் யுரீத்ராவின் துவாரமும் இனப்பெருக்க உறுப்பான வெஜைனாவுக்கான துவாரமும் மலம் வெளியேறும் ஆசனவாய் துவாரமும் அருகருகில் இருப்பதும் மற்றொரு காரணமாகும்.
பொதுவாக பெண்களுக்கு சிறுநீர்ப்பாதை தொற்று ஏற்படுவதற்கான காரணங்கள்
1. அசுத்தமான கழிப்பிடங்களில் இருந்து தொற்றைப் பெறுவது
2. இணையரிடம் இருந்து இணைசேர்தலினால் தொற்று உருவாகுதல்
3. தண்ணீர் உட்கொள்ளுதல் அளவு தேவைக்கும் குறைவாக இருத்தல்
4. சிறுநீர்கழிக்கும் இச்சை தோன்றும் போது கழிக்காமல் காலம் தாழ்த்துவது
5. ஆசன வாய் சுத்தம் செய்யும் முறை
6. இனப்பெருக்க உறுப்பில் தொற்று ஏற்பட்டு அதில் இருந்து சிறுநீர்ப்பாதைக்குள் தொற்று செல்வது.
மேற்சொன்ன காரணங்களும் அதை தவிர்க்கும் முறைகளையும் அலசுவோம் வாருங்கள்
1. அசுத்தமான கழிப்பிடங்களில் இருந்து தொற்றைப் பெறுவது தற்காலத்தில் பயணங்கள் அதிகரித்து விட்டபடியால் பேருந்து / மகிழுந்து / தொடர் வண்டி/ விமானப் பயணங்கள் வாழ்வின் முக்கிய இடங்களைப் பிடித்துள்ளன.
இதில் ஆண்களைப் பொருத்தவரை பொதுக் கழிப்பிடங்களை எளிதாக பயன்படுத்த முடியும் காரணம் கழிப்பறையில் நேரடியாக உட்காரும் தேவையில்லை.
பெண்களுக்கோ வெஸ்டர்ன் டாய்லெட்டில் டாய்லெட் சீட்டில் அமர்ந்து சிறுநீர் கழிக்க வேண்டிய தேவை இருக்கிறது.
முடிந்தவரை வெஸ்டர்ன் டாய்லெட் மற்றும் இந்தியன் டாய்லெட் இரண்டில் ஒன்றை தேர்ந்தெடுக்கும் வாய்ப்பு இருப்பின் பொது கழிப்பிடங்களில் இந்தியன் டாய்லெட்டை தேர்ந்தெடுக்கவும்.
- வெஸ்டர்னை உபயோகிக்கும் முன் டாய்லெட் சீட்டை தண்ணீர் ஊற்றி கழவலாம்.
- டாய்லெட் சீட்டில் விரிக்கும் டிஸ்யூ பேப்பர் விற்கிறது. அதை வாங்கி பைகளில் வைத்துக் கொண்டு டாய்லெட் சீட்டில் விரித்து அதன் மீது அமர்ந்து சிறுநீர் கழிக்கலாம்
- சிறுநீர் கழிக்க அமரும் போது டாய்லெட் சீட்டில் சிறுநீர் கழிக்கும் துவாரம் மற்றும் இனப்பெருக்க உறுப்பு நேரடியாக டாய்லெட் சீட்டில் படாதவாறு உட்காருவது தொற்றுப் பரவலைக் குறைக்கும்
- சிறுநீர் கழித்து விட்டு உட்கார்ந்த படியே டாய்லெட்டை ஃப்லஷ் செய்யக்கூடாது. உட்கார்ந்த படியே ஃப்லஷ் செய்தால் கிருமிகள் காற்றில் பறந்து சிறுநீர்ப்பாதையில் தொற்று ஏற்படும் வாய்ப்பு அதிகரிக்கும். கூடவே சிறுநீர்கழித்து விட்டு எழுந்து டாய்லெட் சீட்டை மூடிவிட்டு ஃப்லஷ் செய்வதே சரியான முறையாகும்.
- அடிக்கடி சிறுநீர் பாதை தொற்றுக்கு உள்ளாகும் பெண்களுக்கான மற்றோரு யோசனை
- பயணங்களின் போது எந்த கழிப்பறையிலும் உட்காராமல் நின்று கொண்டு அதே சமயம் துணியில் சிறுநீர் தெளிக்காமல் கழிக்க யூஸ் & த்ரோ கோன் வடிவ சிறுநீர் கழிக்கும் பேப்பர்கள் கிடைக்கின்றன. அவற்றை பயன்படுத்தலாம்
2. இணையரிடம் இருந்து இணைசேர்தலினால் தொற்று உருவாகுதல்
இணையருக்கு சிறுநீர்ப்பாதை தொற்று இருந்தால் இணை சேர்தலின் போது தொற்றுப் பரவல் நடக்கும் வாய்ப்பு உள்ளது.
இதைத் தவிர்க்க இணைசேர்வதற்கு இணை சேர்தலுக்கு முன் இணையர் கண்டிப்பாக சிறுநீர் கழிக்க வேண்டும்.
சிறுநீர் கழித்த பின் , ஆண் குறியை முன்பக்கமாக பிதுக்கி குறியில் இருக்கும் சில துளி சிறுநீரையும் வெளியே விட்டு விட்டு நன்றாக சுத்தம் செய்ய வேண்டும்.
பெண்கள் இணைசேர்தலுக்குப் பிறகு சிறுநீர் கழித்து விட்டு இனப்பெருக்க உறுப்பை சுத்தம் செய்து விட வேண்டும். இது தொற்றுப் பரவலைக் குறைக்கும்.
3. தண்ணீர் உட்கொள்ளுதல் அளவு
தேவைக்கும் குறைவாக இருத்தல் தினசரி மூன்று முதல் நான்கு லிட்டர் தண்ணீர் என்ற அளவை சரியாக குடிப்பது முக்கியமானது.
தண்ணீர் குறைவாக குடிப்பதால் சிறுநீர் அடர்த்தியானால் கிருமித் தொற்று அதிகரிக்கும் வாய்ப்பு உண்டு. சிறுநீர் எப்போதும் வெளிர் மஞ்சள் நிறத்தில் இருப்பது சிறந்தது.
4. சிறுநீர்கழிக்கும் இச்சை தோன்றும் போது கழிக்காமல் காலம் தாழ்த்துவது
தண்ணீரை சரியான அளவில் அருந்தும் போது இரண்டு மணிநேரங்களுக்கு ஒருமுறையேனும் சிறுநீர் கழிக்கும் இச்சை தோன்றும்.
எனினும் பயணங்களின் போதும் அலுவலகங்களிலும் சிறுநீர் கழிக்கும் இச்சையை கட்டுப்படுத்த நீரைக் குறைவாக அருந்துவதும் கூடவே சிறுநீர் கழிக்கும் இச்சை தோன்றினாலும் அதை அடக்குவதும் சிறுநீர்ப்பாதை தொற்று ஏற்படும் வாய்ப்பை அதிகரிக்கும்.
5. ஆசன வாய் சுத்தம் செய்யும் முறை
மலம் கழித்து முடித்த பிறகு ஆசன வாயை முன் பக்கத்தில் இருந்து பின் பக்கமாக சுத்தம் செய்ய வேண்டும்.
இது மலத்தில் உள்ள கிருமிகளை சிறுநீர்ப்பாதைக்கோ இனப்பெருக்க உறுப்பிற்கோ கொண்டு செல்லாமல் பாதுகாக்கும் யுக்தியாகும். இதை சிறார் சிறுமியர்க்கு ஆரம்ப காலங்களிலேயே பயிற்றுவிக்க வேண்டும்.
6. இனப்பெருக்க உறுப்பில் தொற்று ஏற்பட்டு அதில் இருந்து சிறுநீர்ப்பாதைக்குள் தொற்று செல்வது
பெண்களுக்கு இனப்பெருக்க உறுப்பான வெஜைனாவில் கிருமித் தொற்று ஏற்பட்டு வெள்ளைப்படும் பிரச்சனை இருப்பின் அதற்குரிய சிகிச்சையை உடனே எடுத்துக் கொள்ள வேண்டும் காலம் தாழ்த்தினால் அருகில் உள்ள சிறுநீர்ப்பாதைக்கு தொற்று பரவும் வாய்ப்பு உண்டு.
இவையன்றி நீரிழிவு இருக்கும் சகோதரிகள் / முதியவர்கள் தங்களின் ரத்த சர்க்கரை அளவுகளைக் கட்டுக்குள் வைக்க வேண்டும்.
கட்டுக்கடங்காத நீரிழிவினால் அபாயகரமான சிறுநீர்ப் பாதை தொற்று ஏற்படும் வாய்ப்பு உள்ளது.
உணவில் ப்ரோபயாடிக் எனப்படும் நல்ல பாக்டீரியாக்கள் அடங்கிய தயிர் கெஃபிர் யோக்ஹர்ட் கொம்புச்சா ப்ரோபயாடிக் ஊறுகாய்கள் போன்றவற்றை உட்கொள்ளலாம்.
அடிக்கடி எண்ணெயில் பொரித்த உணவுகள் , இனிப்பான பண்டங்கள், பேக்கரி உணவுகள் போன்றவற்றை உண்பதைத் தவிர்க்கலாம்.
மேற்கூறிய வழிகள் மூலம் சிறுநீர்ப்பாதை தொற்று ஏற்படாமல் பெண்கள் தங்களைக் காத்துக் கொள்ள முடியும் என்று நம்புகிறேன்.