பிரியாணிக்கே டஃப் கொடுக்கும் மதுரை ஸ்பெஷல் தக்காளி சாதம் - பண்ணலாமா?
Madurai-Style Tomato rice :காலையில் உங்கள் பிள்ளைகளுக்கு லன்ச்பாக்ஸிற்கு என்ன செய்வது என்று யோசித்துக் கொண்டிருக்கிறீர்களா? அப்படியானால் எளிமையானதும்ஆரோக்கியமானதுமான இந்த மதுரை ஸ்பெஷல் தக்காளி சாதத்தை ஒரு முறை செய்து கொடுங்கள்.
இந்த தக்காளி சாதம் நீங்கள் வழக்கமாக சாப்பிடும் தக்காளி சாதம் போல இருக்காது. கொங்கு பகுதிகளில் அரிசி பருப்பு சாதம் எப்படி பிரபலமானதோ அதேபோல மதுரை சுற்றுவட்டாரத்தில் இந்த தக்காளி சாதம் மிகவும் பிரபலமானது.

இந்த மதுரை ஸ்பெஷல் தக்காளி சாதத்தை எளிய படிமுறையில் விரைவாக எவ்வாறு செய்யலாம் என இந்த பதிவில் பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
சீரக சம்பா அரிசி – ஒன்றரை கப்
தண்ணீர் – 2 கப்
தக்காளி – 4 (பொடியாக நறுக்கியது)
மிளகாய்த்தூள் – 1 டீஸ்பூன்
மஞ்சள்தூள் – ½ டீஸ்பூன்
வெங்காயம் – 2 (பொடியாக நறுக்கியது)
பச்சை மிளகாய் – 4 (நீளவாக்கில் கீறியது)
இஞ்சி – ½ அங்குலத் துண்டு (பொடியாக நறுக்கியது)
பூண்டு – 5 பல் (பொடியாக நறுக்கியது)
புதினா இலைகள் – 4 (பொடியாக நறுக்கியது)
எண்ணெய் – 2 ஸ்பூன்
நெய் – 1 ஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
மசாலாப் பொருட்கள்
சோம்பு – 1 ஸ்பூன்
ஏலக்காய் – 2
பிரிஞ்சி இலை – 1
கிராம்பு – 3
அன்னாசிப்பூ – 1
கல்பாசி – சிறிதளவு
பட்டை – 1

செய்முறை
முதலில் வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய் ஆகியவற்றைப் பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ள வேண்டும். புதினா இலைகளையும் நறுக்கி எடுத்துக் கொள்ளவும்.
அதனையடுத்து சீரக சம்பா அரிசியை நன்றாகக் கழுவி வடிகட்டி வைத்துக் கொள்ளவும். பின்னர் ஒரு குக்கரில் எண்ணெய் மற்றும் நெய் சேர்த்துச் சூடாக்கவும்.
சூடானதும் பட்டை, கிராம்பு, ஏலக்காய், சோம்பு உள்ளிட்ட மசாலாப் பொருட்களை ஒவ்வொன்றாகச் சேர்த்து, நல்ல மணம் வரும் வரை வதக்கவும்.அடுத்து நறுக்கி வைத்துள்ள வெங்காயம் மற்றும் பச்சை மிளகாயைச் சேர்த்து நன்றாக வதக்கவும்.

வெங்காயம் பொன்னிறமாக வதங்கியதும் இஞ்சி, பூண்டு சேர்த்து சில நிமிடங்கள் வதக்கவும். பின்னர் நறுக்கிய புதினா இலைகளைச் சேர்த்து நன்றாகக் கிளறிவிட வேண்டும்.
தொடர்ந்து நறுக்கிய தக்காளி, மஞ்சள்தூள், மிளகாய்த்தூள் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து, தக்காளி நன்றாக வதங்கி ஓரளவு மென்மையாகும் வரை கிளறிவி்ட வேண்டும்.
இப்போது தேவையான அளவு தண்ணீர் மற்றும் கழுவி வடிகட்டி வைத்துள்ள சீரக சம்பா அரிசியைச் சேர்த்து நன்றாகக் கலந்துவிட வேண்டும்.

சீரக சம்பா அரிசியை விரைவாக வெந்துவிடும் என்பதால், குக்கரை மூடி மிதமான தீயில் வைத்து ஒரு விசில் வரும் வரை வேகவிடவும். ஒரு விசில் வந்ததும் அடுப்பை அணைத்துவிடவும்.
ஆறியதும் மூடியைத் திறந்து சாதத்தை மெதுவாகக் கிளறிவிட்டால் அவ்வளவுதான் அசத்தல் சுவையில் மதுரை ஸ்பெஷல் தக்காளி சாதம் தயார்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |