நடிகர் அக்ஷய குமாரை சண்டைக்கு அழைத்த அண்டர்டேகர்; காரணம் இதுதானா?
பிரபல பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார் நடிப்பில் கடந்த 1996ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் 'கில்லாடியோன் கா கில்லாடி'. இந்த படத்தில், பிரபல தொழில்முறை குத்துச்சண்டை வீரரான அண்டர்டேகருடன் நடிகர் அக்ஷய் குமார் மோதுவது போன்ற காட்சி இடம் பெற்றிருக்கும்.
மேலும், அண்டர்டேகர் வேடத்தில் நடித்திருந்த நடிகரை அக்ஷய் குமார் அடிக்கும் அந்தக் காட்சிக்கு படம் வெளியான சமயத்தில் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது.
இதனையடுத்து, கில்லாடியோன் கா கில்லாடி திரைப்படம் வெளியாகி 25 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன. இதனை நினைவு கூரும் விதமாக ரசிகர்கள் பல்வேறு மீம்ஸ்களை சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.
அதில், அண்டர்டேகரை இதுவரை வீழ்த்தியவர்கள் என ரோமன் ரெய்ன்ஸ், பிராக் லெஸ்னர், ட்ரிபிள் ஹெச் ஆகியோருடன் அக்ஷய் குமார் புகைப்படத்தை இணைத்து உருவாக்கியிருந்த ஒரு மீம்ஸ் சமூக வலைதளங்களில் வைரலானது.
அந்த மீம்ஸை நடிகர் அக்ஷய் குமாரும் தன்னுடைய சமூக வலைதளப்பக்கத்தில் பகிர்ந்திருந்தார். இந்த நிலையில், அப்பதிவைக்கண்ட அண்டர்டேகர், "உண்மையான ரீமேட்சுக்கு எப்போது நீங்கள் தயார் என அக்ஷய் குமாரிடம் கேள்வி எழுப்பினார்.
அதற்குப் பதிலளித்த அக்ஷய் குமார், என்னுடைய ஆயுள் காப்பீட்டை சரி பார்த்துவிட்டு வருகிறேன் எனக் கிண்டலாகப் பதிவிட்டார். இப்பதிவு தற்போது இணையத்தில் வைரலாகிவருகிறது.