எண்ணெய் குடிக்காமல் மொறு மொறு உளுந்து வடை! இந்த சின்ன டிப்ஸ் போதும்
சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் பலகாரங்களில் ஒன்று உளுந்து வடை.
பொங்கல், இட்லி, தோசை என எதுவாக இருந்தாலும் காலை உணவுடன் உளுந்து வடை ருசித்தாலே அலாதி சுகம் தான்.
அப்படி பலரும் விரும்பும் உளுந்து வடையை மிக எளிதாக வீட்டிலேயே செய்வது எப்படி என தெரிந்து கொள்ளலாம்.
தேவையான பொருட்கள்
உளுந்தம் பருப்பு - முக்கால் கப்
பச்சரிசி- ஒரு கைப்பிடி
சின்ன வெங்காயம் - 10
பச்சை மிளகாய் - 2
கறிவேப்பிலை - தேவையான அளவு
கொத்தமல்லி இலை- தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு
செய்முறை
முதலில் உளுந்தம் பருப்பு மற்றும் பச்சரிசியினை சுமார் ஒரு மணிநேரம் ஊறவைத்து கிரைண்டரில் அரைத்துக் கொள்ளவும்.
அரைக்கும் போது தண்ணீர் தெளித்து தெளித்து நைசாக ஆட்டி எடுத்துக் கொள்ளவும். சிறிது மாவை எடுத்து தண்ணீரில் போட்டால் அது மிதக்க வேண்டும், இதுவே சரியான பக்குவம்.
மாவை தோண்டி எடுத்த பின்னர், நறுக்கி வைத்த சின்ன வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை, கொத்தமல்லி தழை மற்றும் உப்பு சேர்த்து பிசைந்து கொள்ளவும்.
வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், சிறு சிறு வடைகளை தட்டி எடுத்து போட்டு பொரித்தால் சுவையான உளுந்து வடை தயார்.
குறிப்பு
சிறிதளவு பச்சரிசி சேர்த்து அரைப்பதால் வடை மிக மெதுவாகவும், அதே சமயம் மொறு மொறுப்பாகவும் ஹோட்டல் சுவையில் இருக்கும்.