பாரம்பரிய முறையில் சின்ன வெங்காய சாம்பார்... வெறும் 10 நிமிடங்கள் போதும்
பொதுவாகவே தென்னிந்திய உணவுகளில் சாம்பாருக்கு முக்கிய இடம் காணப்படுகின்றது. மதியம் சாத்துக்கு நிச்சயம் சாம்பார் இருக்கும்.
ஆனால் பெரும்பாலானவர்களுக்கு சாம்பாரை சுவையாகவும் அதே நேரத்தில் விரைவாகவும் செய்வது பெரும் சவாலான விடயமாக இருக்கும்.
அப்படி சாம்பார் வைக்க கஷ்டப்படுபவர்கள் வெறும் 10 நிமிடங்களில் பாரம்பரிய முறைப்படி அசத்தல் சுவையில் சின்ன வெங்காய சாம்பாரை எவ்வாறு செய்யலாம் என இந்த பதிவில் பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
பருப்பு வேக வைப்பதற்கு தேவையானவை
துவரம் பருப்பு - 1 கப் அல்லது 200 கிராம்
தண்ணீர் - 2 கப்
மஞ்சள் தூள் - 1/4 தே.கரண்டி
பெருங்காயத் தூள் - 1 சிட்டிகை
விளக்கெண்ணெய் - 1/2 தே.கரண்டி
சாம்பாருக்கு தேவையானவை
எண்ணெய் - 3 தே.கரண்டி
கடுகு - 1 தே.கரண்டி
வெந்தயம் - 1/4 தே.கரண்டி
சீரகம் - 1/2 தே.கரண்டி
பெருங்காயத் தூள் - 1/4 தே.கரண்டி
சின்ன வெங்காயம் - 200 கிராம்
பச்சை மிளகாய் - 2 (நறுக்கியது)
கறிவேப்பிலை - 1 கொத்து
வரமிளகாய் - 1
தக்காளி - 1 (பொடியாக நறுக்கியது)
உப்பு - சுவைக்கேற்ப
சாம்பார் தூள் - 1 1/2 தே.கரண்டி
புளி - சிறிய எலுமிச்சை அளவு (நீரில் ஊற வைத்து சாறு எடுத்துக் கொள்ளவும்)
கொத்தமல்லி - சிறிதளவு
செய்முறை
முதலில் துவரம் பருப்பை சுத்தம் செய்து குக்கரில் போட்டு அத்துடன், 2 கப் நீர், மஞ்சள் தூள், பெருங்காயத் தூள், விளக்கெண்ணெய் ஆகியவற்றை சேர்த்து 2 விசில் வரும் வரையில் நன்றாக வேக வைத்து எடுத்துக்கொள்ள வேண்டும்.
பின்பு ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு, வெந்தயம், சீரகம், பெருங்காயத் தூள் ஆகியவற்றை போட்டு தாளித்துக்கொள்ள வேண்டும்.
அதனையடுத்து சின்ன வெங்காயத்தை சேர்த்து 2 நிமிடம் வதக்கி, பச்சை மிளகாய், கறிவேப்பிலை, வரமிளகாய் ஆகியவற்றையும் போட்டு நன்றாக வதக்கிக்கொள்ள வேண்டும்.
பின்னர் அதில் தக்காளி மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து, அதில் சாம்பார் தூளை சேர்த்து 1 நிமிடம் வரையில் மிதமான தீயில் வேகவிட வேண்டும்.
பின்னர் சிறிது தண்ணீர் ஊற்றி கலந்து, மூடி வைத்து 5 நிமிடங்கள் வரையில் நன்றாக கொதிக்க விட்டு, புளிச்சாற்றினை ஊற்றி 5 நிமிடங்கள் வேகவிட வேண்டும்.
இநுதியாக நறுக்கிய கொத்தமல்லியைத் தூவி இறக்கினால், சுவையான சின்ன வெங்காய சாம்பார் தயார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |