உங்கள் காதலன்/ காதலி நல்லவரா? Toxic Relationship என்பது என்ன?
காதல் என்ற அழகிய வார்த்தைக்கு ஆயிரமாயிரம் அர்த்தங்கள், ஆதாம்- ஏவாள் காலம் தொடங்கி நம் ஒவ்வோர் மனதிலும் இன்று வரை ஆழமாய் பயணிப்பது காதல்.
எந்தவொரு உறவாக இருந்தாலும் சரி உண்மையான காதல் இல்லை என்றால், பல ஏமாற்றங்களே மிஞ்சும்.
ஆனால் இன்றோ தொழில்நுட்பம் வளர வளர உண்மையான காதல்கள் காணாமல் போய்விட்டதோ என்றே எண்ணத் தோன்றுகிறது.
காரணம், ஆசிட் வீச்சு, கொடூரமாக கொலை, சின்னச்சின்ன காரணங்களுக்காக காதலன்/காதலியை பழிவாங்குதல் என்றெல்லாம் கேள்விப்பட்டுக் கொண்டிருக்கிறோம்.
சமீபத்தில் கூட லிவ் இன் ரிலேஷன்சிப்பில் வாழ்ந்து வந்த காதலியை 35 துண்டுகளாக காதலன் வெட்டிக் கொன்ற சம்பவம் ஒட்டுமொத்த நாட்டையும் உலுக்கியது.
இதற்கு என்ன காரணம்? அவனுடன் வாழ்ந்த போது அந்த பெண்ணால் கண்டுபிடிக்க முடியவில்லையா? நல்லவனாக இல்லை என்றபோது எளிதாக பிரிந்து வந்திருக்கலாமே? என பல கேள்விகளும் நம்முள் எழாமல் இல்லை.
இப்படியான காதலை தான் "Toxic Relationship" என அழைக்கிறார்கள், இதை கண்டுபிடிப்பது எப்படி? தீர்வுகள் என்னென்ன? என்பது குறித்து விரிவாக அலசலாம்.
Toxic Relationship என்பது என்ன?
உங்களை அதிகம் நேசிக்கிறேன் என்ற பெயரில், காதலன்/காதலியின் கட்டுப்பாட்டிலேயே வைத்திருப்பதையே Toxic Relationship என்று அழைக்கிறார்கள்.
உன்னுடைய இருப்பிடத்தை எனக்கு அனுப்பி வை? உடனடியாக போட்டோ எடுத்து அனுப்பு? நீ யாருடன் என்ன பேசிக்கொண்டிருக்கிறாய்? என பல கேள்விகளால் நம்பகத்தன்மையை பரிசோதிப்பது.
சுருக்கமாக சொல்லப்போனால், உன் மேல் அதீத அக்கறை என்ற பெயரில் சுதந்திரத்தை பறித்து கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பது.
எப்படி கண்டறியலாம்?
ஆரோக்கியமான உறவு என்றால் ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்து வாழ்வது, பிரச்சனையை இருவரும் அலசி ஆராய்ந்து அதற்கேற்ப முடிவுகளை எடுப்பது. ஆனால் Toxic Relationshipல் இது சாத்தியமில்லை, நான் சொல்வதை மட்டுமே நீ கேட்க வேண்டும் என்று அழுத்தம் அதிகரிக்கும்.
நீ செய்யும் வேலைகளில் அடிக்கடி குறைகூறிக்கொண்டே இருப்பது. மனம்விட்டு பேச நினைத்தாலும் அதற்கான இடத்தை கொடுக்காமல் அவர்களது எண்ணத்தை மட்டுமே உன்னுள் திணிக்க நினைப்பது.
சுயமரியாதை பறிக்கப்பட்டு, சந்தோஷமான சூழலை ஏற்படுத்தாமல் மன அழுத்தத்தை அதிகரிப்பது.
நீ எங்கு சென்றாலும் சந்தேகப்பட்டுக்கொண்டு ”எங்கு இருக்கிறாய்?” என அடிக்கடி கேட்டுக்கொண்டு இருப்பது.
அதீத பொறாமையால் அடிக்கடி துன்புறுத்துவது. நீங்கள் நல்லதே செய்தாலும், உங்களது பணியில் உயர்வு அடைந்தாலும் சிறுமைப்படுத்துவது மிக முக்கியமான மனரீதியான துன்புறுத்தல்கள், மனதளவில் கஷ்டப்படும் படியான கேள்விகள், செயல்பாடுகள்.
உடனடியாக என்ன செய்யலாம்?
Toxic Relationshipல் இருப்பதாக உறுதியானால், முதலில் அதிலிருந்து வெளியே வருவதற்கான செயல்பாடுகளை மேற்கொள்ள வேண்டும்.
வாழ்க்கை என்னவாகும்? இதுதான் விதி என அப்படியே ஏற்றுக்கொண்டு வாழ்ந்துவிடலாம் என்ற எண்ணத்தை முதலில் தூக்கி எறிந்து விடுங்கள்.
ஏனெனில் ஒரே இரவில் யாரும் மாறிவிட மாட்டார்கள் என்பதை முதலில் புரிந்து கொள்ளுங்கள்.
உங்களுக்கு நம்பிக்கையான நெருங்கிய உறவினர் அல்லது நண்பருடன் பேசலாம், அப்படி யாரும் இல்லை என்றபட்சத்தில் அமைப்புகள் அல்லது மனநல ஆலோசகரை தொடர்பு கொள்ளலாம்.
மிக முக்கியமாக போலிசார் வழங்கியுள்ள அவசர எண்களை தொடர்பு கொண்டு உங்களுடைய பிரச்சனை குறித்து தெரியப்படுத்துங்கள்!!!
Images: Shutterstock