Tomato Chutney: தக்காளி சட்னி கெட்டியா இருக்கணுமா? இந்த ஒரு பொருளை மட்டும் சேர்த்து பாருங்க
பொதுவாகவே இந்திய உணவுகளில் சட்னி வகைகளுக்கு முக்கிய இடம் கொடுக்கப்படுகின்றது. குறிப்பாக இட்லி ,சோசைக்கு தக்காளி சட்னி தான் பெரும்பாலானவர்களின் தெரிவாக இருக்கும்.
வீட்டில் உள்ள சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரையில் அனைவரும் விரும்பும் வகையில் தக்காளி சட்னியை எப்படி அசத்தல் சுவையில் கெட்டியான பதத்தில் செய்யலாம் என இந்த பதிவில் பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
எண்ணெய் - 2 தே.கரண்டி
பூண்டு - 4 பல்
வெங்காயம் - 1 (நறுக்கியது)
வரமிளகாய் - 6
பெரிய தக்காளி - 2 (நறுக்கியது)
உப்பு - சுவைக்கேற்ப
புளி - சிறிய துண்டு
பொட்டுக்கடலை - 2 மேசைக்கரண்டி
தண்ணீர் - தேவையான அளவு
தாளிப்பதற்கு தேவையானவை
எண்ணெய் - 2 தே.கரண்டி
கடுகு - 1/2 தே.கரண்டி
உளுத்தம் பருப்பு - 1 தே.கரண்டி
கறிவேப்பிலை - 1 கொத்து
செய்முறை
முதலில் ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், பூண்டு மற்றும் வெங்காயத்தை சேர்த்து பொன்நிறமாக மாறும் வரையில் நன்றாக வதக்கிக்கொள்ள வேண்டும்.
பின்னர் அதனுடன் வரமிளகாய் சேர்த்து 1 நிமிடம் வதக்கி, அதன் பின்னர் அதில் நறுக்கிய தக்காளி, சுவைக்கேற்ப உப்பு, சிறு துண்டு புளி ஆகியவற்றை சேர்த்து தக்காளி மென்மையாகும் வரையில் நன்றாக வதக்கிக்கொள்ள வேண்டும்.
சட்னியின் சுவையையும் கெட்டித்தன்மையையும் அதிகரிக்க அதில் பொட்டுக்கடலை சேர்த்து 1 நிமிடம் வதக்கி இறக்கி ஆறவிட வேண்டும்.
பின்னர் வதக்கிய பொருட்களை ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து, சிறிது தண்ணீர் ஊற்றி மென்மையான பதத்திற்கு அரைத்துக்கொள்ள வேண்டும்.
அதனையடுத்து அரைத்த சட்னியை ஒரு கிண்ணத்திற்கு மாற்றிக்கொள்ள வேண்டும்.
இறுதியாக ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து, அதில் தாளிப்பதற்கு எண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு, உளுத்தம் பருப்பு மற்றும் கறிவேப்பிலை சேர்த்து தாளித்து, சட்னியுடன் சேர்த்து கிளறினால், அவ்வளவு தான் அருமையான சுவையில் தக்காளி பொட்டுக்கடலை சட்னி தயார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |