உலகில் மிக உயரமான பெண்ணின் விமான பயணம்: அவர் சொன்ன நெகிழ்ச்சியான வார்த்தைகள்
உலகின் மிக உயரமான பெண்ணான ருமேசா கெல்கி முதன்முறையாக விமானத்தில் பயணித்த நெகிழ்ச்சியான சம்பவம் நடந்தேறியுள்ளது.
மிக உயரமான பெண்
துருக்கியை சேர்ந்த ருமேசா கெல்கியின் உயரம் 7 அடி 7 அங்குலம் ஆகும், 6 அடி இருந்தாலே அன்றாட வேலைகளை செய்வது கடினமாகிவிடும், அதுவும் 7 அடி என்றால் சொல்லவா வேண்டும்.
ரயில், பேருந்து போன்ற பொது போக்குவரத்தை பயன்படுத்துவது கூட சிரமம் தான், அப்படி பல இன்னல்களை சந்தித்து வந்த ருமேசா கெல்கி, முதன்முறையாக விமானத்தில் பயணம் செய்துள்ளார்.
துருக்கியை சேர்ந்த விமான நிறுவனம் ஒன்று, ருமேசாவுக்காக பல மாற்றங்களை செய்து அவரது கனவு நிறைவேற்றியுள்ளது.
விசேட வசதிகள்
அந்த விமானத்தில், 6 இருக்கைகள் கொண்ட இடத்தில் படுக்கை ஒன்றை அமைத்து ருமேசா கெல்கியை துருக்கியிருந்து அமெரிக்காவுக்கு அழைத்து சென்றுள்ளது.
இதுகுறித்து தன்னுடைய இன்ஸ்டாகிராமில் நெகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ள ருமேசா கெல்கி, இதுதான் என்னுடைய முதல் விமான பயணம், ஆனால் இது கடைசி விமான பயணமாக இருக்காது, தொடக்கம் முதல் முடிவு வரை குறைவற்ற பயணமாக இருந்தது என தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவில் வேலை
13 மணிநேரம் கடந்து அமெரிக்கா சென்றுள்ள ருமேசா கெல்கி, அங்கு ஐடி நிறுவனம் ஒன்றில் பணியாற்றவிருக்கிறார்.
அதற்காகவே துருக்கியிலிருந்து விமான பயணத்தை மேற்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் தன்னுடைய முதல் விமான பயணத்தை சாத்தியமாக்கிய அனைவருக்கும் நன்றி என தெரிவித்துள்ளார்.
விமானத்திற்குள் நுழைந்தவுடன் அங்கிருந்த பணிப்பெண்கள் அனைவரும் ருமேசா கெல்கியை உற்சாகத்துடன் வரவேற்றனர்.
இதுதொடர்பான புகைப்படங்கள் வெளியாகி வைரலாவதுடன் நெட்டிசன்களின் பாராட்டுகளை பெற்று வருகிறது.