Onion Bonda: டீ கடை பாணியில் வெங்காய போண்டா
பொதுவாகவே பெரும்பாலானவர்களுக்கு டீ, காபி இன்றி ஒரு நாளைக்கூட கழிக்க முடியாது என்றால் மிகையாகாது.
குறிப்பாக டீ குடிக்கும் போது கடித்துக்கொள்வதற்கு வெங்காய போண்டா இருந்தால், சொல்லவும் வேண்டுமா? அதன் சுவை சொர்க்கம் தான்.
டீ, காபிக்கு பக்காவாக பொருந்தும் வெங்காய போண்டாவை டீ கடை பாணியில் அசத்தல் சுவையில், வீட்டிலேயே எளிமையாக எவ்வாறு செய்யலாம் என இந்த பதிவில் பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
வெங்காயம் - 2
கறிவேப்பிலை - 1 கொத்து
புதினா - 1/2 கைப்பிடி (பொடியாக நறுக்கியது)
கொத்தமல்லி - 1/2 கைப்பிடி (பொடியாக நறுக்கியது)
சோம்பு - 2 தே.கரண்டி
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 மேசைக்கரண்டி
பச்சரிசி மாவு - 150 கிராம்
மிளகாய் தூள் - 1 தே.கரண்டி
உப்பு - சுவைக்கேற்ப
சிவப்பு நிற கேசரி பவுடர் - 1 சிட்டிகை
ஆப்ப சோடா - 1தே.கரண்டி
மைதா - 2 மேசைக்கரண்டி
கடலை மாவு - 2 மேசைக்கரண்டி
கரம் மசாலா - 1 சிட்டிகை
தண்ணீர் - தேவையான அளவு
எண்ணெய் - பொரிப்பதற்கு தேவையான அளவு
செய்முறை
முதலில் வெங்காயத்தை நீளவாக்கில் மெல்லியதாக நறுக்கி ஒரு பாத்திரத்தில் தனியாக எடுத்துக்கொள்ள வேண்டும்.
அதனையடுத்து ஒரு அகலமான பாத்திரத்தில் நறுக்கிய வெங்காயம், கறிவேப்பிலை, பொடியாக நறுக்கிய கொத்தமல்லி, புதினா, சோம்பு ஆகியவற்றை சேர்த்து நன்றாக கலந்துவிட்டுக்கொள்ள வேண்டும்.
பின்னர் அதனுடன் இஞ்சி பூண்டு பேஸ்ட், பச்சரிசி மாவு, மிளகாய் தூள், மற்றும் சுவைக்கேற்ப உப்பு ஆகியவற்றையும் சேர்க்க வேண்டும்.
அதனையடுத்து அதில், சிவப்பு நிற கேசரி பவுடர், ஆப்ப சோடா, மைதா மாவு, கடலை மாவு, கரம் மசாலா ஆகியவற்றை சேர்த்து கைகளால் நன்றாக பிசைந்துக்கொள்ள வேண்டும்.
பின்னர் அந்த கலவையில் சிறிது நீரை ஊற்றி போண்டா மாவு பதத்திற்கு நன்றாக பிசைந்து எடுத்துக்கொள்ள வேண்டும்.
இறுதியாக ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி கொதிக்க விட வேண்டும்.
எண்ணெய் நன்கு சூடானதும், போண்டா மாவை கொஞ்சம் கொஞ்சமாக உருண்டை வடிவில் எடுத்து எண்ணெயில் போட்டு, பொன்னிறமாக பொரித்து எடுத்தால், அவ்வளவு தான் அசத்தல் சுவையில், டீக்கடை வெங்காய போண்டா தயார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |