சிறுநீரக கற்கள் உருவாவதை தடுக்கும் புடலங்காய் பொரியல்... இப்படி செய்து பாருங்க
பொதுவாக காய்கறிகள் என்றாலே ஊட்டச்சத்துக்களும் மருத்துவ குணங்களும் நிறைந்திருக்கும். அந்த வகையில், புடலங்காயும் பல்வேறு மருத்துவ குணங்களைக் கொண்டது.
இது நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்தவும், மலச்சிக்கலை நீக்கவும், சிறுநீரக கற்களை தடுக்கவும் உதவுகிறது.
மேலும், புடலங்காய் உடலில் உள்ள வாத நீரை வெளியேற்றவும், காய்ச்சலை தணிக்கவும் பயன்படுகிறது.
புடலங்காய் சிறுநீரக கற்கள் உருவாவதைத் தடுத்து, சிறுநீரகத்தின் செயல்பாட்டை மேம்படுத்த துணைப்புரிகின்றது.
புடலங்காய் குறைந்த கலோரி மற்றும் அதிக நார்ச்சத்து கொண்டிருப்பதால், இது உடல் எடையைக் குறைக்க விரும்புவோருக்கு சிறந்த தெரிவாக இருக்கும்.
இவ்வளவு நன்மைகளை கொண்டிருந்தாலும் பெரும்பாலானவர்கள் இந்த காயை ஒதுக்கிவிடுவார்கள். பிடிக்காதவர்களும் விரும்பி சாப்பிடும் வகையில் அசத்தல் சுவையில் புடலங்காய் பொரியல் எவ்வாறு செய்யலாம் என இந்த பதிவில் பார்க்லாம்.
தேவையான பொருட்கள்
பருப்பு வேக வைப்பதற்கு...
கடலைப் பருப்பு - 3 மேசைக்கரண்டி
தண்ணீர் - தேவையான அளவு
உப்பு - 1/2 தே.கரண்டி
மஞ்சள் தூள் - 1 சிட்டிகை
தாளிப்பதற்கு
எண்ணெய் - 2 மேசைக்கரண்டி
கடுகு - 1 தே.கரண்டி
உளுத்தம் பருப்பு - 1 1/2 தே.கரண்டி
வரமிளகாய் - 3
வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
பச்சை மிளகாய் - 3 (நீளவாக்கில் நறுக்கியது)
கறிவேப்பிலை - 1 கொத்து
புடலங்காய் - 300 கிராம்
உப்பு - 3/4 தே.கரண்டி
மஞ்சள் தூள் - 1/4 தே.கரண்டி
தண்ணீர் - 1 கையளவு
துருவிய தேங்காய் - 3 மேசைக்கரண்டி
செய்முறை
முதலில் குக்கரில் கடலைப் பருப்பை கழுவி சேர்த்து, அதில் பருப்பு மூழ்கும் அளவிற்கு தண்ணீர் ஊற்றி, உப்பு மற்றும் 1 சிட்டிகை மஞ்சள் தூள் சேர்த்து, அடுப்பில் வைத்து, குக்கரை மூடி 4-5 விசில் விட்டு இறக்கி ஆறவிட வேண்டும்.
பின்னர் விசில் போனதும், குக்கரைத் திறந்து, தண்ணீரை வடிகட்டி விட்டு, பருப்பை தனியாக ஒரு பாத்திரத்திற்கு மாற்றிக்கொள்ள வேண்டும்.
அதனையடுத்து புடலங்காயை எடுத்து உப்பு சேர்த்து நன்கு தேய்த்து, பின் நீரில் கழுவ வேண்டும். பின்னர் அதில் உள்ள விதைகளை நீக்கிவிட்டு, சற்று நீளத் துண்டுகளாக வெட்டி வைத்துக்கொள்ள வேண்டும்.
அதனையடுத்து ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு மற்றும் உளுத்தம் பருப்பு சேர்த்து தாளிக்க வேண்டும்.
பின்னர் அதில் வரமிளகாயை முழுதாக சேர்த்து, பின் பொடியாக நறுக்கி வைத்துள்ள வெங்காயத்தை சேர்த்து நன்றாக வதக்கிக்கொள்ள வேண்டும்.
அதனையடுத்து அதனுடன் கீறி வைத்துள்ள பச்சை மிளகாய், கறிவேப்பிலை மற்றும் நறுக்கி வைத்துள்ள புடலங்காயையும் சேர்த்து நன்றாக வதக்கிக்கொள்ள வேண்டும்.
பின்னர் அதில் உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து, 1 கையளவு நீரை தெளித்து, நன்றாக கிளறி விட்டு, மூடி வைத்து 10 நிமிடங்கள் வரையில் புடலங்காயை நன்றாக வேகவிட வேண்டும்.
பின்னர் அதில் வேக வைத்துள்ள கடலைப்பருப்பை சேர்த்து நன்கு கிளறி, 2 நிமிடம் வேக வைக்க வேண்டும்.
கடைசியாக துருவிய தேங்காயை சேர்த்து நன்றாக கிளறிவிட்டு இறக்கினால், அவ்வளவு தான் அருமையான சுவையில் ஆரோக்கியம் நிறைந்த புடலங்காய் பொரியல் தயார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |
