சிக்கனுக்கே டஃப் கொடுக்கும் உருளைக்கிழங்கு மஞ்சூரியன்... இப்படி ஒரு முறை செய்து பாருங்க
பொதுவாகவே சில காய்கறிகள் அனைவருக்குமே மிகவும் பிடித்தவையாக இருக்கும். அதில் முக்கியமானது என்றால் உருளைக்கிழங்கு தான்.
அசைவ பிரியர்களும் விரும்பி சாப்பிடும் உருளைக்கிழங்கை பொரியல் செய்தாலும் சரி, குழம்பு வைத்தாலும் சரி வீட்டில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள்.
சிக்கனைப் போலவே உருளைக்கிழங்கையும் பல வழிகளில் சமைக்கலாம். அப்படி ஒரு தனித்துவமான உருளைக்கிழங்கு ரெசிபி தான் உருளைக்கிழங்கு மஞ்சூரியன். அசத்தல் சுவையில் உருளைக்கிழங்கு மஞ்சூரியன் எப்படி செய்யலாம் என இந்த பதிவில் பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
4 உருளைக்கிழங்கு
¼ கப்சோள மாவு
¼ கப் மைதா மாவு
1 பெரிய வெங்காயம்
½ கப் குடை மிளகாய்
2 பூண்டு பல்
சோயா சாஸ் - 1 தே.கரண்டி
ரெட் சில்லி சாஸ் - 1 தே.கரண்டி
கிரீன் சில்லி சாஸ் - 1 தே.கரண்டி
டொமேட்டோ கெட்சப் - 1 தே.கரண்டி
வினிகர் - 2 தே.கரண்டி
மிளகு தூள் -¼ தே.கரண்டி
மிளகாய் தூள் - ஒன்றரை தே.கரண்டி
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் -தேவையான அளவு
வெங்காயத்தாள் - சிறிதளவு
செய்முறை
முதலில் வெங்காயம், குடை மிளகாய், பூண்டு, மற்றும் வெங்காயத்தாளை நறுக்கி தனியாக ஒரு தட்டில் எடுத்துக்கொள்ள வேண்டும். அதனையடுத்து உருளைக்கிழங்கை பிடித்த வடிவில் நறுக்கி தண்ணீரில் போட்டு வைத்து கொள்ள வேண்டும்.
அதயைடுத்து ஒரு பாத்திரத்தில் சோள மாவு, மைதா மாவு, மிளகு தூள், உப்பு, மற்றும் மிளகாய் தூள் ஆகியவற்றை போட்டு நன்றாக கலந்துக்கொள்ள வேண்டும்
பின்னர் அதில் கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீர் சேர்த்து அதை நன்றாக கரைத்து கொள்ள வேண்டும். பின்னர் நறுக்கி வைத்திருக்கும் உருளைக்கிழங்கை எடுத்து இதில் போட்டு அதை நன்றாக கிளறி விட்டுக்கொள்ள வேண்டும்.
அதனையடுத்து ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து அதில் உருளைக்கிழங்கை பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி அது சூடானதும், உருளைக்கிழங்கை ஒவ்வொன்றாக சேர்த்து பொன்னிறமாக மாறும் வரையில் வறுத்து பின்னர் அதை ஒரு பாத்திரத்திற்கு மாற்றி எண்ணெயை வடிகட்டவும்.
அடுத்து ஒரு கடாயை அடுப்பில் வைத்து சூடானதும் அதில் ஒரு ஸ்பூன் அளவு எண்ணெய் ஊற்றி அதை சுட வைக்கவும். எண்ணெய் சூடானதும் அதில் நறுக்கி வைத்திருக்கும் வெங்காயத்தை போட்டு வெங்காயம் கண்ணாடி பதம் வரும் வரை வதக்கவும்.
வெங்காயம் நன்றாக வதங்கியதும் அதில் பொடியாக நறுக்கி வைத்திருக்கும் பூண்டை போட்டு பச்சை வாசனை போகும் வரையில் வதக்கி, அதில் நாம் நறுக்கி வைத்திருக்கும் குடை மிளகாயை போட்டு அதை சுமார் 2 நிமிடம் வதக்கிக்கொள்ள வேண்டும்.
அதன் பின்னர் அதில் சோயா சாஸ், ரெட் சில்லி சாஸ், க்ரீன் சில்லி சாஸ், வினிகர், மற்றும் கெட்சப்பை ஊற்றி அதை நன்றாக கிளறி விட்டு, அதில் சிறிதளவு தண்ணீர் மற்றும் சோள மாவில் சிறிதளவு தண்ணீர் ஊற்றி கரைத்து அதையும் கடாயில் ஊற்றி நன்கு கலந்து விட வேண்டும்.
பின்னர் அதில் பொரித்து வைத்திருக்கும் உருளைக்கிழங்கை போட்டு அதை நன்கு கிளறி விட்டு சிறிது நேரம் நன்றாக வேக விட்டு, பின்னர் அதில் சிறிதளவு வெங்காயத்தாளை தூவி கிளறிவிட்டு இறக்கினால் அவ்வளவு தான் சூப்பரான உருளைக்கிழங்கு மஞ்சூரியன் தயார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |