நாவூரும் சுவையில் உருளைக்கிழங்கு கார வறுவல்! இப்படி ஒரு முறை செய்து பாருங்க
பொதுவாகவே அசைவ பிரியவர்களும் விரும்பி சாப்பிடும் சைவ உணவுப்பட்டியலில் உருளைக்கிழங்கு நிச்சயமாக முக்கிய இடம் வகிக்கின்றது.
காய்கறிகள் என்றாலே தெறித்து ஓடும் சிறுவர்கள் கூட உருளைக்கிழங்கு என்றால் விரும்பி சாப்பிடுவார்கள்.

அந்தளவுக்கு தனித்துவமான சுவையும் ஊட்டச்சத்துக்களும் கொண்ட உருளைக்கிழங்கை மிகவும் எளிமையாக முறையில் ஹோட்டல் பாணியில் அனைவரும் விரும்பும் வகையில் காரசாரமான உருளைக்கிழங்கு வறுவல் செய்முறை குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
வேகவைத்த உருளைக்கிழங்கு - 3
எண்ணெய் - 2 தே.கரண்டி
கடுகு - 1/2 தே.கரண்டி
உளுத்தம்பருப்பு - 1 தே.கரண்டி
கடலைப்பருப்பு - 1 தே.கரண்டி
கறிவேப்பிலை - ஒரு கொத்து
மிளகாய்த்தூள் - 1 தே.கரண்டி
மஞ்சள்தூள் - 1/4 தே.கரண்டி
பெருங்காயம் - 1/4 தே.கரண்டி
உப்பு - தேவையான அளவு
அரிசி மாவு - 1.5 தே.கரண்டி
கடலை மாவு - 1.5 தே.கரண்டி

செய்முறை
முதலில் உருளைக்கிழங்கை நன்றாகக் சுத்தம் செய்து தண்ணீரில் கழுவி, தேவையான அளவு தண்ணீர் சேர்த்து, அதிக தீயில் 2 முதல் 3 விசில் வரும் வரை பிரஷர் குக்கரில் வேகவிட்டு எடுத்துக்கொள்ள வேண்டும்.
ஆறியதும் தோலை உரித்து, பெரிய துண்டுகளாக நறுக்கி தனியாக எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும்.

பின்னர் ஒரு கிண்ணத்தில் கடலை மாவு, அரிசி மாவு, மிளகாய் தூள், மஞ்சள் தூள் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு கலந்து வைத்துக்கொள்ள வேண்டும்.
அதனையடுத்து ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து எண்ணெயை ஊற்றி சூடாக்கி, அதில் கடுகு, உளுந்து, கடலைப்பருப்பு மற்றும் கறிவேப்பிலையைப் ஆகியவற்றை போட்டுத் தாளித்துக்கொள்ள வேண்டும்.
கடுகு பொரிந்ததும் தீயை முழுவதுமாகக் குறைக்கவும். கலந்து வைத்துள்ள பொடிகளைச் சேர்க்கவும். மாவு அடிபிடித்து விடாமல் வேகமாக கிளறிவிட வேண்டும்.

பின்னர் வேக வைத்த உருளைக்கிழங்குத் துண்டுகளைச் சேர்த்து நன்றாகக் கலந்துவிட்டு, சிறிதளவு தண்ணீர் சேர்த்து உருளைக்கிழங்கு நன்றாக வறுபடும் வரை, மிதமான தீயில் வறுத்துக்கொள்ள வேண்டும்.
மசாலா பொருட்கள் அனைத்தும் உருளைக்கிழங்கில் நன்றாக சேர்ந்ததும் பெருங்காயம் சேர்த்து நன்றாக கலந்துக்கொள்ள வேண்டும்.
உருளைக்கிழங்கு நன்றாக வெந்ததும் அடுப்பை அணைத்துவிட்டு இறக்கினால் அவ்வளவுதான் அசத்தல் சுவையில் காரசாரமான உருளைக்கிழங்கு கார வறுவல் தயார்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |