புரட்டாசி ஞாயிறு ஸ்பெஷல்: கல்யாண வீட்டு ஸ்டைல் பூரி மசாலா – சுவை அள்ளும்!
புரட்டாசி மாதம் வந்துவிட்டாலே ஞாயிற்றுக்கிழமைகளில் பல வீடுகளில் காலை டிபனுக்கு பூரிதான் ஸ்பெஷல்.அதிலும் சூடான, உப்பலான பூரியுடன் மணமணக்கும் உருளைக்கிழங்கு மசாலாவைத் தொட்டுச் சாப்பிட்டால், அதன் சுவையே தனிதான்.
ஆனால், எப்போதும் ஒரே மாதிரி உருளைக்கிழங்கு மசாலா செய்து சாப்பிடுவதற்குப் பதிலாக, இந்த வாரம் கல்யாண வீட்டு ஸ்டைலில் பூரி மசாலா செய்து பாருங்கள்.

கல்யாண வீடுகளில் பரிமாறப்படும் அந்தத் தனித்துவமான சுவையும் மணமும் வீட்டிலேயே கிடைப்பதோடு, வழக்கத்தைவிட இன்னும் இரண்டு பூரி அதிகமாகச் சாப்பிடத் தோன்றும்.
அப்படி வீட்டில் உள்ள சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரையில் அனைவரும் விரும்பும் சுவையான கல்யாண வீட்டு பூரி மசாலாவை எளிமையாக வீட்டிலேயே எவ்வாறு செய்யலாம் என இந்த பதிவில் பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்
எண்ணெய் – 2 டேபிள்ஸ்பூன்
கடுகு – 1 டீஸ்பூன்
உளுத்தம் பருப்பு – 1 டீஸ்பூன்
கடலைப் பருப்பு – 1 டேபிள்ஸ்பூன்
முந்திரி – 10
கறிவேப்பிலை – 1 கொத்து
பச்சை மிளகாய் – 3 (கீறியது)
இஞ்சி – 1 டேபிள்ஸ்பூன் (துருவியது)
பெரிய வெங்காயம் – 2 (நீளமாக மெல்லியதாக நறுக்கியது)
மஞ்சள் தூள் – ½ டீஸ்பூன்
பெருங்காயத் தூள் – ¼ டீஸ்பூன்
உப்பு – (தேவையான அளவு)
தண்ணீர் – ½ லிட்டர்
உருளைக்கிழங்கு – 4 (வேக வைத்து மசித்தது)
கடலை மாவு – 1 டேபிள்ஸ்பூன் (¼ கப் தண்ணீரில் கரைத்தது)
எலுமிச்சை சாறு – 1 டேபிள்ஸ்பூன்
கேரட் – ¼ கப் (பொடியாக நறுக்கியது)
பச்சைப் பட்டாணி – ¼ கப்
கொத்தமல்லித் தழை – சிறிதளவு
பால் – ¼ கப்

செய்முறை
முதலில் ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடாக்கவும். அதில் கடுகு, உளுத்தம் பருப்பு, கடலைப் பருப்பு, முந்திரி ஆகியவற்றைச் சேர்த்து நன்றாகத் தாளிக்கவும்.
கடுகு வெடிக்கத் தொடங்கியதும் கறிவேப்பிலை, பச்சை மிளகாய், துருவிய இஞ்சி ஆகியவற்றைச் சேர்த்து வாசனை வரும் வரை வதக்கவும்.
இப்போது நறுக்கிய வெங்காயத்தைச் சேர்த்து வதக்கவும். அதனுடன் மஞ்சள் தூள், பெருங்காயத் தூள், தேவையான அளவு உப்பு சேர்த்து வெங்காயம் நன்றாக வதங்கும் வரை கிளறவும்.

அடுத்து ½ லிட்டர் தண்ணீரை ஊற்றி கொதிக்க விடவும். தண்ணீர் கொதித்ததும் மசித்து வைத்துள்ள உருளைக்கிழங்கைச் சேர்த்து கட்டிகள் இல்லாமல் நன்றாகக் கிளறிவிட வேண்டும்.
பின்னர் பொடியாக நறுக்கிய கேரட், பச்சைப் பட்டாணி ஆகியவற்றைச் சேர்க்கவும். கடலை மாவை ¼ கப் தண்ணீரில் கரைத்து, மசாலாவில் மெதுவாக ஊற்றிக் கிளறிவிட வேண்டும்.
காய்கறிகள் நன்றாக வேகி, மசாலா சற்று கெட்டியாகும் வரை 5–10 நிமிடங்கள் கொதிக்க விடவும். இறுதியாகப் பால் சேர்த்துக் கிளறி, அடுப்பை மிதமான தீயில் வைத்து சிறிது நேரம் சூடாக்கவும்.
பின்னர் எலுமிச்சை சாறு, பொடியாக நறுக்கிய கொத்தமல்லித் தழை சேர்த்துக் கலந்து அடுப்பை அணைக்கவும். சுவையான, மணமான கல்யாண வீட்டு பூரி மசாலா தயார்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |