ஹைதராபாத் பாணியில் அசத்தல் முட்டை குழம்பு... இப்படி செய்தா கொஞ்சமும் மிஞ்சாது
பொதுவாகவே மலிவு விலையில் எளிதாகக் கிடைக்கக்கூடிய உணவுப் பொருட்களின் பட்டியலில் முட்டைக்கு எப்போதும் முக்கியமான இடம் உண்டு.
பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை வயது வித்தியாசமின்றி அனைவரும் விரும்பி சாப்பிடும் உணவாகவும் முட்டை இருந்து வருகிறது. குறிப்பாக, உடலுக்குத் தேவையான புரதச்சத்தை வழங்கும் சிறந்த உணவுகளில் முட்டையும் ஒன்றாகும்.

முட்டையில் புரதம் மட்டுமின்றி, உடலின் ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்குத் தேவையான பல்வேறு ஊட்டச்சத்துக்களும் நிறைந்துள்ளன. எலும்புகளின் வலிமை மற்றும் வளர்ச்சிக்கு உதவுவது முதல் கூந்தல் மற்றும் சரும ஆரோக்கியத்தைப் பாதுகாப்பது வரை பல்வேறு நன்மைகளை முட்டை வழங்குகிறது.
அதுமட்டுமின்றி, இதய ஆரோக்கியத்திற்கும் தேவையான சத்துக்களை கொண்டிருப்பதால், அன்றாட உணவில் முட்டையை சேர்த்துக்கொள்வது பலருக்கும் பயனுள்ளதாக அமைகிறது.

இப்படி சத்தும், சுவையும் நிறைந்த முட்டையை வழக்கமாக செய்வதைவிட சற்று வித்தியாசமான முறையில் காரமும் மணமும் நிறைந்த ஹைதராபாத் பாணியில் நாவூறும் சுவையுடன் முட்டை குழம்பை வீட்டிலேயே எளிதாகத் தயாரிக்கலாம்.
வழக்கமான முட்டை குழம்பிலிருந்து சற்று மாறுபட்ட சுவையுடன், மசாலாக்களின் மணமும், குழம்பின் சுவையும் சேர்ந்து அசத்தும் இந்த ஹைதராபாத் பாணி முட்டை குழம்பை எவ்வாறு செய்வது என எளிய படிமுறைகள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்
4 முட்டை
2 ஸ்பூன் வேர்க்கடலை
1 ஸ்பூன் எள்
3 ஸ்பூன் துருவிய தேங்காய்
1 பெரிய வெங்காயம்
4 ஸ்பூன் எண்ணெய்
1 ஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது
1/2 ஸ்பூன் மஞ்சள் தூள்
1 ஸ்பூன் மிளகாய் தூள்
1 ஸ்பூன் சீரகத்தூள்
1 ஸ்பூன் மல்லித்தூள்
1 ஸ்பூன் கரம் மசாலா
1/2 கப் புளிச்சாறு
5 பச்சை மிளகாய்
2 ஸ்பூன் நறுக்கிய கொத்தமல்லி இலை
1 ஸ்பூன் நறுக்கிய புதினா
தேவையான அளவு உப்பு
தேவையான அளவு தண்ணீர்

செய்முறை
முதலில் முட்டைகளை 10 நிமிடங்கள் வேகவைத்து, தோலை உரித்து வைத்துக் கொள்ளவும். பின்னர் முட்டைகளில் லேசாக கீறல் போட்டு வைக்கவும்.
ஒரு கடாயில் வேர்க்கடலையைச் சேர்த்து, மிதமான தீயில் நன்கு வறுக்கவும். வேர்க்கடலை வெடித்து நிறம் மாறத் தொடங்கியதும் எள் மற்றும் துருவிய தேங்காயைச் சேர்த்து, தேங்காய் லேசாக நிறம் மாறும் வரை வறுக்கவும்.
பின்னர் அடுப்பை அணைத்து ஆறவிடவும். அதே கடாயில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி சூடானதும் நறுக்கிய வெங்காயத்தைச் சேர்த்து வதக்கவும்.
வெங்காயம் கண்ணாடி பதத்திற்கு வந்ததும் அடுப்பை அணைத்து, தனியாக எடுத்து வைக்கவும். இப்போது வறுத்த வேர்க்கடலை கலவை, வதக்கிய வெங்காயம் மற்றும் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து நன்றாக அரைத்து மென்மையான விழுதாகத் தயாரிக்கவும்.

ஒரு பாத்திரத்தில் 3 டேபிள்ஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானதும் அரைத்த வேர்க்கடலை விழுதைச் சேர்க்கவும். அதனுடன் மஞ்சள்தூள், மிளகாய்த்தூள் மற்றும் இஞ்சி-பூண்டு விழுது சேர்த்து நன்றாக வதக்கவும்.
இஞ்சி-பூண்டு விழுதின் பச்சை வாசனை போனதும் சீரகத்தூள், மல்லித்தூள் மற்றும் கரம் மசாலாவைச் சேர்த்து கிளறவும்.
பின்னர் கீறி வைத்த முட்டைகள், புளிச்சாறு, பச்சை மிளகாய் மற்றும் உப்பு சேர்த்து சுமார் 5 நிமிடங்கள் மிதமான தீயில் கொதிக்க விட வேண்டும்.
குழம்பு நன்றாக கெட்டியாகி எண்ணெய் மேலே பிரிந்து வரத் தொடங்கியதும், நறுக்கிய கொத்தமல்லி இலை மற்றும் புதினா இலைகளைச் சேர்க்கவும்.
மேலும் 5 நிமிடங்கள் கொதிக்கவிட்டு இறக்கினால், அவ்வளவுதான் சுவையான ஹைதராபாத் முட்டை மசாலா தயார்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |