செரிமான கோளாறுக்கு தீர்வு கொடுக்கும் பூண்டு ஊறுகாய்... வீட்டிலேயே செய்வது எப்படி.?
பொதுவாகவே அனைவரும் சமையலில் பயன்படுத்தும் பொருட்களில் இன்றியமையாத பொருளாக பூண்டு காணப்படுகின்றது.
பூண்டு உடலுக்கு மிகவும் நல்லது. இதில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் பல மருத்துவ குணங்கள் உள்ளமை அனைவரும் அறிந்ததே.
பூண்டானது நிறைய மருத்துவ குணங்கள் நிறைந்தது. வாயுத் தொல்லை, நெஞ்சுக்குத்தல் போன்ற பிரச்சினைகளுக்கு தீர்வைப் பெற்றுத்தரும்.
இத்தனை மருத்துவ குணங்கள் கொண்ட பூண்டை தினசரி உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டியது அவசியம். அதற்கு சுவையாக தீர்வாக பூண்டு ஊறுகாய் காணப்படுகின்றது.
அனைவரும் விரும்பும் வகையில் பூண்டு ஊறுகாயை வீட்டிலேயே எளிமையான முறையில் எப்படி செய்யலாம் என இந்த பதிவில் பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
பூண்டு - 1 கப்
எலுமிச்சை சாறு - 1/2 கப்
கொத்தமல்லி விதைகள் - 2 தே.கரண்டி
சீரகம் - 1 1/2 தே.கரண்டி
வெந்தயம் - 1 தே.கரண்டி
மஞ்சள் தூள் - 1 தே.கரண்டி
மிளகாய் தூள் - 4 தே.கரண்டி
நல்லெண்ணெய் - 1/4 கப்
உப்பு - தேவையான அளவு
செய்முறை
முதலில் பாத்திரமொன்றை அடுப்பில் வைத்து சூடானதும் கொத்தமல்லி விதைகளை போட்டு வாசனை வரும் வகையில் நன்றாக வறுத்து தனியாக எடுத்துக்கொள்ள வேண்டும்.
பின்னர் அதே பாத்திரத்தில் சீரகம் மற்றும் வெந்தயம் ஆகியவற்றை தனித்தனியாக போட்டு வாசனை வரும் வரை நன்றாக வறுத்துக்கொள்ள வேண்டும்.
பின்னர் ஒரு மிக்ஸி ஜாரில் வறுத்த பொருட்களை போட்டு நன்கு பொடியாக அரைத்து எடுத்துக்கொள்ள வேண்டும்.
பின்னர் ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து நல்லெண்ணெய் ஊற்றி சூடானதும் தோல் நீக்கிய பூண்டை அதில் போட்டு நன்றாக வதக்கிக்கொள்ள வேண்டும்.
நன்கு வதங்கிய பின்னர் அரைத்து வைத்துள்ள பொடியை போட்டு அதனுடன் தேவையான அளவு உப்பு, மஞ்சள் தூள் மற்றும் மிளகாய் தூள் ஆகியவற்றை சேர்த்து நன்கு கிளறிவிட வேண்டும்.
பின்னர் அதில் எலுமிச்சை சாற்றை சேர்த்து கெட்டியாகும் வரை அடுப்பை மிதமான தீயில் வைத்து நன்றாக கிளறிக்கொண்டே இருக்க வேண்டும்.
ஊறுகாய் சற்று கெட்டியானதும் அடுப்பில் இருந்து இறக்கினால் ருசியான பூண்டு ஊறுகாய் தயார்.
நன்றாக ஆறய பின்னர் காற்றுப் புகாத பாட்டிலில் போட்டு வைத்தால் சில மாதங்கள் வரை பயன்படுத்தலாம். இது வாயுபிரச்சினை மற்றும் செரிமான சிக்கல்களுக்கு சிறந்த தீர்வாக இருக்கும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |