ஆரோக்கியத்தை அள்ளிக்கொடுக்கும் முட்டை பணியார தொக்கு... எப்படி செய்வது?
பொதுவாகவே புரததிற்கான மிகச் சிறந்த மூலமாக முட்டை காணப்படுகின்றது. முடி உதிர்வு பிரச்சினை தொடக்கம் சரும பாதுகாப்பு வரை உடல் ஆரோக்கியத்தில் முட்டை பெரும் பங்கு வகிக்கின்றது.
தினமும் சராசரியாக முட்டை எடுத்துக் கொண்டவர்களுக்கு இதய நோய் பாதிப்பு குறைந்துள்ளது.ஆய்வுகளில் உறுதி செய்யப்பட்டுள்ளது.
முட்டை இயற்கையான மல்டிவைட்டமின் ஆகும். முட்டை பல ஆரோக்கிய நன்மைகளை அளிக்கக்கூடிய ஒரு சத்தான உணவு என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.
அவ்வாறு ஆரோக்கியம் நிறைந்த முட்டையில் சுவையான முட்டை பணியார தொக்கு எப்படி செய்யலாம் என இந்த பதிவில் பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
முட்டை பணியாரம் செய்ய தேவையானவை
முட்டை - 3
பெரிய வெங்காயம் - 1
கடலை மாவு - 1 தே .கரண்டி
கறிவேப்பிலை - சிறிதளவு
கொத்தமல்லி இலை - சிறிதளவு
எண்ணெய் - தேவையான அளவு
உப்பு - 1 தேவையான அளவு
தொக்கு செய்ய தேவையானவை
பெரிய வெங்காயம் - 2
தக்காளி - 2
மிளகாய் தூள் - 1 தே .கரண்டி
கரம் மசாலா - 1 தே .கரண்டி
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1தே .கரண்டி
சோம்பு - 1 தே .கரண்டி
எண்ணெய் - தேவையான அளவு
புதினா - சிறிதளவு
கறிவேப்பிலை - சிறிதளவு
கொத்தமல்லி இலை - சிறிதளவு
உப்பு - தேவையான அளவு
செய்முறை
முதலில் ஒரு பாத்திரத்தில் முட்டையை உடைத்து ஊற்றி கொள்ள வேண்டும். அதில் பொடியாக நறுக்கிய ஒரு பெரிய வெங்காயம், கறிவேப்பிலை, கொத்தமல்லி இலை, கடலை மாவு மற்றும் தேவையான அளவு உப்பு என்பவற்றை சேர்த்து நன்றாக கலந்துக்கொள்ள வேண்டும்.
அதன் பின்னர் அடுப்பில் பணியார கல்லை வைத்து காய்ந்ததும் அதில் எண்ணெய் விட்டு சூடாக்கிக்கொள்ள வேண்டும்.
அதன் பின் தயார் செய்து வைத்துள்ள முட்டையை பணியார கல்லில் ஊற்றி கொள்ள வேண்டும்.
வெந்ததும் முட்டையை திருப்பி போட்டு மறுபக்கத்தையும் நன்றாக வேகவைத்து கொள்ள வேண்டும். வெந்த பின்னர் ஒரு தட்டில் தனியாக எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும்.
அதன் பின்னர் பாத்திரம் ஒன்றை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் சோம்பு, பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம், கறிவேப்பிலை ஆகியவற்றுடன் தேவையான அளவு உப்பு சேர்த்து வெங்காயம் பொன்நிறமாகும் வரை நன்றாக வதக்கிக் கொள்ள வேண்டும்.
பின்னர் அதில் பொடியாக நறுக்கிய தக்காளி மற்றும் புதினாவையும் சேர்த்து நன்றாக வதக்க வேண்டும்.
பின்னர் இதில் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து வதக்கவும்.பின்னர் மிளகாய் தூள் மற்றும் கரம் மசாலா சேர்த்து மசாலாவின் பச்சை வாசனை போகும் வரையில் நன்றாக வதக்கிக்கொள்ள வேண்டும். பின்னர் அதனுடன் சிறிதளவு தண்ணீர் சேர்த்து நன்றாக கலந்துகொள்ள வேண்டும்.
பின்னர் அதில் ஏற்கனவே செய்து வைத்துள்ள முட்டை பணியாரத்தை சேர்த்து நன்றாக கிளறிவிட வேண்டும்.
பின்னர் பாத்திரத்தை மூடிவைத்த மிதமான தீயில் 10 நிமிடங்களுக்கு நன்றாக வேக வைக்க வேண்டும்.
கடைசியில் பொடியாக நறுக்கிய கொத்தமல்லி இலைகளை தூவி இறக்கினால் சுவையான முட்டை பணியார தொக்கு தயார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |