நாவூரும் சுவையில் முட்டை குழம்பு... இப்படி செய்தால் துளியும் மிஞ்சாது!
பொதுவாகவே எல்லா காலங்களிலும் மலிவு விலையில் கிடைக்கக்கூடிய முட்டை, உடல் ஆரோக்கியத்தை வலுப்படுத்த மிகவும் இன்றியமையாதது.
காரணம் முட்டையில் அதிக அளவில் சத்துக்களானது நிறைந்துள்ளது. முட்டையில் புரதம் ரிபோப்லாவின், போலேட், இரும்புச்சத்து, பாஸ்பரஸ், செலினியம், மக்னீசியம், விட்டமின் A, E மற்றும் B6 அதிகமாக உள்ளதால், இவை தசை மற்றும் திசுக்களின் வளர்ச்சிக்கு தேவையான ஊட்டத்தை வழங்குகின்றது.
புரதத்திற்கான சிறந்த மூலமாக திகழும் முட்டை கூந்தல் வளர்ச்சி முதல் அதய ஆரோக்கியம் வரையில் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதில் பெரும் பங்கு வகிக்கின்றது.
இவ்வளவு ஆரோக்கிய நன்மைகள் நிறைந்த முட்டையை கொண்டு வீட்டில் உள்ள பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரையில் அனைவரும் விரும்பும் வகையில் அட்டகாசமான சுவையில் முட்டை குழம்பு எப்படி செய்வது என இந்த பதிவில் பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
முட்டை - 4
பெரிய வெங்காயம் - 2
தக்காளி - 1
பூண்டு - 10 பல்
மல்லித்தூள் - 2 1/2 தே.கரண்டி
மஞ்சள் தூள் - 1/4 தே.கரண்டி
மிளகாய்த் தூள் - 1/2 தே.கரண்டி
கொத்தமல்லித்தழை - ஒரு கொத்து
எண்ணெய் - 4 தே.கரண்டி
உப்பு - தேவையான அளவு
செய்முறை
முதலில் 3 முட்டைகளை ஒரு பாத்திரத்தில் போட்டு அவை மூழ்கும் அளவுக்கு தண்ணீர் விட்டு 10 நிமிடங்கள் வரையில் வேகவைத்து, ஆறியதும், ஓடு நீக்கி, நீளவாக்கில் இரண்டாக வெட்டி தனியாக வைத்துக்கொள்ள வேண்டும்.
அதனையடுத்து வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்கிக் கொள்ள வேண்டும். பின்னர் பூண்டை தோல் நீக்கி சுத்தம் செய்து எடுத்துக்கொள்ள வேண்டும்.
பின்னர் அடுப்பில் பாத்திரமொன்றை வைத்து எண்ணெயை ஊற்றி காய்ந்ததும் பூண்டு சேர்த்து வதக்கி, பிறகு நறுக்கிய வெங்காயத்தைப் போட்டு வதக்கி தனியாக எடுத்துக்கொள்ள வேண்டும்.
அடுத்து நறுக்கிய தக்காளியைப் போட்டு வதக்கவும். இதனுடன் உப்பு, மஞ்சள் தூள், மிளகாய்த்தூள், மல்லித்தூள், தேவையான அளவு தண்ணீர் சேர்த்து நன்றாக கொதிக்க விட வேண்டும்.
நன்கு கொதித்ததும் மீதமுள்ள ஒரு முட்டையை உடைத்து கொதிக்கும் குழம்பில் ஊற்றி நன்கு கிளறிவிட்டு கொதிக்க விட்டு, பின்னர் வெட்டி வைத்துள்ள வேக வைத்த முட்டையை சேர்த்து ஒரு கொதி வரும் வரையில் வேக விட்டு இறுதியாக நறுக்கிய கொத்தமல்லித்தழை தூவி இறக்கினால், அவ்வளவு தான் நாவூரும் சுவையில் முட்டை குழம்பு தயார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |