உங்க குழந்தைகளுக்கு கத்தரிக்காய் மசாலா குழம்பை இப்படி செய்து கொடுங்க
பொதுவாகவே எல்லா காலங்களிலும் மலிவு விலையில் கிடைக்கக் கூடிய ஊட்டச்சத்துகள் நிறைந்த காய்கறிகளுள் கத்தரிக்காய் முக்கிய இடம் வகிக்கின்றது.
ஆனால் நம்மில் பெரும்பாலும் பலர் கத்திரிக்காயை விரும்பி சாப்பிடுவதில்லை. சிலருக்கு அலர்ஜி போன்ற உடல் உபாதைகளை ஏற்படுத்துவதன் காரணமாக அதை ஒதுக்கி வைப்பதை வழக்கமாக வைத்துள்ளனர்.
சிலர் காரணமே இல்லாமல் வீட்டல் உள்ள குழந்தைகள் கத்தரிக்காயை ஒதுக்கி வைத்திருப்பார்கள். அப்படி உங்க வீட்டில் கத்தரிக்காய் பிடிக்காமல் இருப்பவர்களுக்கு ஒரு தடவை இந்த முறையில் கத்தரிக்காய் மசாலா குழம்பு செய்து கொடுத்து பாருங்க.
தேவையான பொருட்கள்
வதக்கி அரைப்பதற்கு தேவையானவை
எண்ணெய் - 1 மேசைக்கரண்டி
பட்டை - 1 துண்டு
ஏலக்காய் - 2
கிராம்பு - 2
சோம்பு - 1தே.கரண்டி
வெங்காயம் - 2 (நறுக்கியது)
முந்திரி - 10
தக்காளி - 1 (நறுக்கியது) தாளிப்பதற்கு
எண்ணெய் - 2 மேசைக்கரண்டி
கத்திரிக்காய் - 1/4 கிலோ (நீளவாக்கில் நறுக்கியது)
சோம்பு - 1 தே.கரண்டி
கறிவேப்பிலை - 1 கொத்து
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 2
மஞ்சள் தூள் - 1/4 தே.கரண்டி
மிளகாய் தூள் - 1 தே.கரண்டி
மல்லித் தூள் - 1 தே.கரண்டி
சிக்கன் மசாலா - 1 தே.கரண்டி
உப்பு - சுவைக்கேற்ப
தண்ணீர் - சிறிதளவு
கொத்தமல்லி - சிறிதளவு
செய்முறை
முதலில் ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், பட்டை, கிராம்பு, ஏலக்காய், சோம்பு ஆகியவற்றை போட்டு தாளித்துக்கொள்ள வேண்டும்.
பின்னர் அதனுடன் வெங்காயத்தை சேர்த்து பொன்நிறமாக மாறும் வரையில் நன்றாக வதக்கிக்கொள்ள வேண்டும்.
அதனையடுத்து முந்திரி மற்றும் தக்காளியை சேர்த்து லேசாக நிறம் மாறும் வரையில் வதக்கி இறக்கி குளிர வைக்க வேண்டும்.
பின்னர் அதனை ஒரு மிக்சர் ஜாரில் சேர்த்து போஸ்ட் பதத்தில் நன்றாக அரைத்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
அதன் பின்பு ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து, அதில் 2 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானதும், கத்திரிக்காயை சேர்த்து வதக்கி அரை பாகத்துக்கு மேல் வேக வைத்து, ஒரு தட்டில் தனியாக எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும்.
பின்னர் அதே பாத்திரத்தில் மீதமுள்ள எண்ணெயில் சோம்பு, கறிவேப்பிலை சேர்த்து தாளித்து, இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து பச்சை வாசனை போகம் வரையில் நன்றாக வதக்கிக்கொள்ள வேண்டும்.
அதனையடுத்து மிளகாய் தூள், மஞ்சள் தூள், மல்லித் தூள், சிக்கன் மசாலா மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து பச்சை வாசனை போகும் வரையில் நன்றாக வதக்கிக்கொள்ள வேண்டும்.
பின்னர் அரைத்து வைத்துள்ள மசாலாவையும் அதனுடன் சேர்த்து கிளறி, பின் வதக்கி வைத்துள்ள கத்திரிக்காயை சேர்த்து கிளறி, மசாலா அனைத்தும் கத்திரிக்காயில் சேரும் வரை 2 நிமிடங்கள் வரையில் நன்கு கிளறிவிட வேண்டும்.
பின்னர் சிறிதளவு நீரை ஊற்றி கிளறி, மிதமான தீயில் வைத்து, 10 நிமிடம் வேகவிட்டு இறுதியில் கொத்தமல்லியைத் தூவி இறக்கினால் அவ்வளவு தான், சுவையான கத்திரிக்காய் மசாலா தயார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |