araikeerai poriyal: மலச்சிக்கலுக்கு தீர்வு கொடுக்கும் பச்சை பயறு அரைக்கீரை பொரியல் ...
பொதுவாகவே கீரை வகைகள் உடல் ஆரோக்கியத்துக்கு இன்றியமையாதவை. குறிப்பாக அரைக்கீரை தினமும் சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கல் பிரச்சனையே வராது.
இது குடல் புண்கள் விரைவில் குணமாகும். அரைக்கீரையில் உள்ள இரும்புசத்து நரம்பு தளர்ச்சியை சரிசெய்து நரம்புகளின் ஆரோக்கியத்தை மேம்படுத்துகின்றது.
அதுமட்டுமன்றி அரைக்கீரை உடலுக்கு குளிர்ச்சியை கொடுக்கின்றது. இரவில் தூக்கமின்றி தவிப்பவர்கள் தினசரி உணவில் இந்த அரைக்கீரையை சேர்த்துக்கொள்வதால், நல்ல பலன் கிடைக்கும்.
கீரையில் எவ்வளவு தான் ஆரோக்கிய நன்மைகள் இருந்தாலும் பெரும்பாலானவர்கள் அதனை ஒதுக்கி வைத்துவிடுவார்கள். கீரை பிடிக்காதவர்களும் கூட கேட்டு வாங்கி சாப்பிடும் வகையில் அசத்தல் சுவையில் பச்சை பயறு அரைக்கீரை பொரியல் எவ்வாறு செய்யலாம் என இந்த பதிவில் பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
பச்சை பயறு - 1/4 கப்
உப்பு - சிறிதளவு
பூண்டு - 10 பல்
பச்சை மிளகாய் - 4
தாளிப்பதற்கு தேவையானவை
எண்ணெய் - 2 மேசைக்கரண்டி
சீரகம் - 1தே.கரண்டி
கடுகு - 1 தே.கரண்டி
வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
வரமிளகாய் - 2
தக்காளி - 1 (பொடியாக நறுக்கியது)
மஞ்சள் தூள் - 1/4 தே.கரண்டி
உப்பு - சுவைக்கேற்ப
அரைக்கீரை - 1 கட்டு (பொடியாக நறுக்கியது)
செய்முறை
முதலில் பச்சை பயறை நன்றாக கழுவிக் கொள்ள வேண்டும். அதனையடுத்து பயறை குக்கரில் போட்டு மூழ்கும் வரை நீரை ஊற்றி, சுவைக்கேற்ப உப்பு சேர்த்து, குக்கரை மூடி அடுப்பில் 4 தொடக்கம் 5 விசில் வரையில் வேகவைத்து எடுத்துக்கொள்ள வேண்டும்.
விசில் போனதும் குக்கரைத் திறந்து, அதில் உள்ள தண்ணீரை வடிகட்டிவிட்டு பயறை தனியாக எடுத்துக்கொள்ள வேண்டும்.
பின்னர் உரலில் பூண்டு சேர்த்து நன்கு தட்டிக் எடுத்துக்கொள்ள வேண்டும். பின் அதே உரலில் பச்சை மிளகாயையும் சேர்த்து நன்கு தட்டிக் கொள்ள வேண்டும்.
அதனையடுத்து ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு, சீரகம் சேர்த்து தாளித்துக்கொள்ள வேண்டும்.
அதன் பின்னர் தட்டி வைத்துள்ள பச்சை மிளகாயையும் சேர்த்து நன்றாக வதக்கி எடுத்து அதன் பின்னர் பொடியாக நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து, அத்துடன் தட்டி வைத்துள்ள பூண்டு மற்றும் வரமிளகாயை சேர்த்து, நன்றாக வதக்கிக்கொள்ள வேண்டும்.
அதன் பின்னர் தக்காளி, உப்பு, மஞ்சள் தூள் ஆகியவற்றை சேர்த்து மென்மையாகும் வரையில் வதக்கிக்கொள்ள வேண்டும்.
பின்னர் பொடியாக நறுக்கி வைத்துள்ள கீரையையும் சேர்த்து கிளறி விட்டு சுமார் 5 நிமிடங்கள் வேகவிட்டு,கீரை நன்கு சுருங்கி, வெந்ததும், வேக வைத்துள்ள பச்சை பயறை சேர்த்து, 5 நிமிடம் நன்கு கிளறி விட்டு இறக்கினால், அவ்வளவு தான் அருமையான சுவையில் பச்சை பயறு அரைக்கீரை பொரியல் தயார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |