மணமும், காரமும் நிறைந்த மட்டன் உப்பு கறி... அசைவப் பிரியர்கள் மிஸ் பண்ணாதீங்க!
Hotel-Style Mutton Uppu Kari Recipe : அசைவ உணவுகளை விரும்பிச் சாப்பிடுபவர்களின் விருப்பப் பட்டியலில் மட்டனுக்கு எப்போதும் தனி இடம் உண்டு. குறிப்பாக, மட்டனில் செய்யப்படும் ஒவ்வொரு உணவுக்கும் தனித்துவமான சுவையும் மணமும் இருக்கும்.
அந்த வகையில், வழக்கமாகச் செய்யும் மட்டன் குழம்பு, மட்டன் வறுவல் என ஒரே மாதிரியான உணவுகளைச் செய்து சலித்துவிட்டீர்களா? அப்படியானால், இந்த முறை சற்று வித்தியாசமாகவும், அதிக சுவையுடனும் இருக்கும் மட்டன் உப்பு கறியை வீட்டிலேயே செய்து பாருங்கள்.

நல்ல மசாலா மணத்துடன், காரசாரமான சுவையில் தயாராகும் இந்த மட்டன் உப்பு கறி, நிச்சயம் அசைவப் பிரியர்களுக்குப் பிடித்தமான உணவாக இருக்கும். மட்டன் நன்கு வெந்து, மசாலாக்களின் சுவை இறைச்சியில் முழுமையாக இறங்கிச் சாப்பிடும்போது அதன் ருசியே தனிதான்.
இந்த மட்டன் உப்பு கறியை இட்லி, தோசை, புரோட்டா, சப்பாத்தி எனப் பலவகையான உணவுகளுடன் சேர்த்துச் சாப்பிடலாம். அதுமட்டுமின்றி, சூடான சாதத்துடன் சேர்த்துப் பரிமாறினாலும் சுவை அட்டகாசமாக இருக்கும்.

வீட்டில் உள்ளவர்கள் அனைவரும் விரும்பிச் சாப்பிடும் வகையில் இந்த மட்டன் உப்பு கறியை எளிய முறையில், சரியான அளவிலான மசாலாப் பொருட்களைச் சேர்த்து படிப்படியாக எப்படித் தயாரிப்பது என இந்த பதிவில் விரிவாக பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
மட்டன் – ½ கிலோ
சின்ன வெங்காயம் – 30 (தோலுரித்து நறுக்கியது)
தக்காளி – ½ (பொடியாக நறுக்கியது)
காய்ந்த சிவப்பு மிளகாய் – 20 (காரத்திற்கு ஏற்ப குறைத்துக் கொள்ளலாம்)
பூண்டுப் பற்கள் – 20
மஞ்சள் தூள் – 1 டீஸ்பூன்
நல்லெண்ணெய் – தேவையான அளவு
கறிவேப்பிலை – 2 கொத்து
உப்பு – சுவைக்கேற்ப

செய்முறை
முதலில் மட்டனை உப்பு மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து இரண்டு அல்லது மூன்று முறை நன்றாகக் கழுவி தனியாக வைத்துக் கொள்ளவும். சின்ன வெங்காயம், பூண்டுப் பற்கள் ஆகியவற்றின் தோலை நீக்கித் தயாராக வைத்துக் கொள்ள வேண்டும்.
தக்காளியையும் பொடியாக நறுக்கிக் கொள்ளவும். அடுப்பில் ஒரு கனமான கடாயை வைத்து, தேவையான அளவு நல்லெண்ணெய் ஊற்றிச் சூடாக்கவும்.
எண்ணெய் சூடானதும் காய்ந்த சிவப்பு மிளகாய்களைச் சேர்த்து நன்றாக வதக்கவும். அதனுடன் பூண்டுப் பற்கள் மற்றும் சின்ன வெங்காயத்தைச் சேர்த்து, வெங்காயம் பொன்னிறமாக மாறி அதன் பச்சை வாசனை நீங்கும் வரை நன்றாக வதக்க வேண்டும்.

பின்னர் கறிவேப்பிலை மற்றும் சிறிதளவு மஞ்சள் தூள் சேர்த்துக் கிளறவும். தொடர்ந்து தேவையான அளவு உப்பு சேர்த்து, நறுக்கி தனியாக வைத்துக்கொள்ள வேண்டும்.
அதனையடுத்து தக்காளியையும் சேர்த்து , தக்காளி நன்கு குழைந்து மென்மையாகும் வரை வதக்கிக்கொள்ள வேண்டும்.
இப்போது சுத்தம் செய்து வைத்துள்ள மட்டன் துண்டுகளைச் சேர்த்து, வெங்காயம், மிளகாய் ஆகியவற்றின் சுவை மட்டனில் நன்றாக இறங்கும் வகையில் சுமார் ஐந்து நிமிடங்கள் நன்றாக கிளறிவிட்டு வதக்கிக்கொள்ள வேண்டும்.

அடுத்து மட்டன் வேகத் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி கடாயை மூடி, மிதமான தீயில் வேகவிடவும். இடையிடையே மூடியைத் திறந்து கிளறிவிட வேண்டும்.
மட்டன் நன்கு வெந்ததும் கடாயின் மூடியை அகற்றி, தண்ணீர் முழுவதுமாக வற்றும் வரை தொடர்ந்து கிளறவும். மட்டன் துண்டுகள் ஒன்றோடொன்று ஒட்டிக்கொண்டு, எண்ணெய் மேலே பிரிந்து வரும் வரை நன்றாக வதக்க வேண்டும்.
மட்டன் துண்டுகள் நன்கு வெந்து, மசாலா அனைத்தும் இறங்கி, எண்ணெய் பிரிந்து வரும் பதம் கிடைத்ததும் அடுப்பை அணைக்கவும். அவ்வளவுதான் மணமும் சுவையும் நிறைந்த பாரம்பரியமான மட்டன் உப்புக்கறி தயார்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |