புரட்டாசி மாத ஸ்பெஷல்: அசத்தல் சுவையில் மீல்மேக்கர் பிரியாணி!
புரட்டாசி மாதம் வந்துவிட்டாலே பலரது உணவுப் பழக்கத்திலும் ஒரு சிறிய மாற்றம் ஏற்படும். குறிப்பாக அசைவ உணவுகளை விரும்பிச் சாப்பிடுபவர்கள், இந்த ஒரு மாத காலம் இறைச்சி, மீன், முட்டை உள்ளிட்ட அசைவ உணவுகளைத் தவிர்த்து விரதம் அல்லது கட்டுப்பாட்டுடன் இருப்பார்கள்.
அசைவ உணவுகளை விரும்பிச் சாப்பிடுபவர்களுக்கு ஒரு மாதம் முழுவதும் அவற்றைத் தவிர்ப்பது அவ்வளவு எளிதான விஷயமல்ல.

அதுவும் பிரியாணி போன்ற உணவுகளை நினைத்தாலே நாக்கில் எச்சில் ஊறும் அளவுக்கு ஆசை வந்துவிடும்! அப்படிப்பட்ட நேரங்களில் அசைவ உணவின் மீதான ஆசையை ஓரளவு குறைக்க, அசைவ உணவைப் போன்ற சுவையும், மணமும், திருப்தியும் தரக்கூடிய சைவ உணவுகளைத் தேடுவது இயல்புதான்.
அந்த வகையில், மீல்மேக்கரை வைத்து செய்யப்படும் பிரியாணி ஒரு சிறந்த தேர்வாக இருக்கும். வீட்டிலேயே எளிமையாகவும் சுவையாகவும் மீல்மேக்கரை வைத்து, அசைவ பிரியாணிக்கு இணையான சுவையில் ஒரு அசத்தல் சைவ பிரியாணியை எப்படி செய்வது என இந்த பதிவில் பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்
பிரியாணி மசாலா பவுடருக்கு
மல்லி - 2 1/2 டேபிள் ஸ்பூன்
சுருள் பட்டை - 10 கிராம்
கிராம்பு - 15
ஏலக்காய் - 15
கருப்பு ஏலக்காய் - 2
மராட்டி மொக்கு - 2
அன்னாசிப்பூ - 4
ஜாவித்திரி - 1
சோம்பு - 3/4 டேபிள் ஸ்பூன்
ஷாஹி ஜீரா - 3/4 டேபிள் ஸ்பூன்
மிளகு - 1/2 டேபிள் ஸ்பூன்
கல்பாசி - 1 டேபிள் ஸ்பூன்
காய்ந்த ரோஜா இதழ்கள் - 1 டேபிள் ஸ்பூன்
கசூரி மெத்தி - 1 டேபிள் ஸ்பூன்
பிரியாணி இலை - 3 பெரியது
ஜாதிக்காய் - சிறிய ஏலக்காய் அளவு
ஊற வைப்பதற்கு
மீல் மேக்கர் - 1 1/2 கப் (15 நிமிடம் ஊற வைத்தது)
சீரக சம்பா அரிசி - 2 கப் (25 நிமிடம் ஊற வைத்தது)
மசாலா அரைப்பதற்கு
பச்சை மிளகாய் - 9
புதினா - 1 கைப்பிடி
கொத்தமல்லி - 1 கைப்பிடி
வெந்தயக்கீரை - 1/2 கைப்பிடி

பிரியாணி தாளிப்பதற்கு
எண்ணெய் - 3 டேபிள் ஸ்பூன்
நெய் - 1 டேபிள் ஸ்பூன்
பட்டை - 1 துண்டு
கிராம்பு - 3
அன்னாசிப்பூ - 1
ஏலக்காய் - 2
ஜாவித்திரி - சிறிது
பிரியாணி இலை - 1
கசூரி மெத்திரி - சிறிது
வெங்காயம் - 2 (நீளவாக்கில் மெல்லியதாக நறுக்கியது)
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 1/2 டேபிள் ஸ்பூன்
அரைத்து வைத்துள்ள மசாலா
தயிர் - 2 டேபிள் ஸ்பூன்
தக்காளி - 1 (நறுக்கியது)
உப்பு - சுவைக்கேற்ப
ஊற வைத்துள்ள மீல் மேக்கர்
மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
மல்லித் தூள் - 1 டேபிள் ஸ்பூன்
பிரியாணி மசாலா - 1 டேபிள் ஸ்பூன்
தண்ணீர் - 3 கப்
எலுமிச்சை சாறு - 3/4 டேபிள் ஸ்பூன்
ஊற வைத்த அரிசி

செய்முறை
முதலில் மீல் மேக்கரை கொதிக்கும் நீரில் போட்டு 15 நிமிடங்கள் ஊற வைக்க வேண்டும். பின்னர் சீரக சம்பா அரிசியை ஒரு பாத்திரத்தில் எடுத்துக் கொண்டு, நீரில் 2 முறை நன்கு கழுவி, தேவையான அளவு தண்ணீர் ஊற்றி 20–25 நிமிடங்கள் ஊற வைக்க வேண்டும்.
பிரியாணி மசாலா பொடி தயாரித்தல்
பிரியாணி செய்வதற்குத் தேவையான மசாலா பொடியை முதலில் தயாரித்துக் கொள்ள வேண்டும். இந்த மசாலா பொடியை காற்றுப்புகாத கண்ணாடி பாட்டிலில் சேமித்து வைத்தால், சுமார் 2 மாதங்கள் வரை பயன்படுத்தலாம்.
மசாலா பொடி தயாரிக்க, ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து, அதில் மல்லி, சுருள் பட்டை, கிராம்பு, ஏலக்காய், கருப்பு ஏலக்காய், மராட்டி மொக்கு, அன்னாசிப்பூ, ஜாவித்திரி, சோம்பு, ஷாஹி ஜீரா, மிளகு, கல்பாசி, காய்ந்த ரோஜா இதழ்கள், கசூரி மெத்தி, பிரியாணி இலை மற்றும் ஜாதிக்காய் ஆகியவற்றைச் சேர்த்து லேசாக சூடேற்ற வேண்டும்.
பின்னர் அடுப்பிலிருந்து இறக்கி, ஒரு தட்டில் கொட்டி நன்கு ஆறவிட வேண்டும். ஆறியதும், வறுத்த மசாலாப் பொருட்களை மிக்சர் ஜாரில் சேர்த்து நன்கு மென்மையாக அரைத்து பொடி செய்து கொள்ள வேண்டும்.தயாரான மசாலா பொடியை காற்றுப்புகாத கண்ணாடி பாட்டிலில் சேமித்து வைத்துக் கொள்ளலாம்.

மசாலா விழுது தயாரித்தல்
பின்னர் மிக்சர் ஜாரில் பச்சை மிளகாய், கொத்தமல்லி, புதினா மற்றும் வெந்தயக்கீரை ஆகியவற்றைச் சேர்த்து நன்கு மென்மையாக அரைத்து விழுதாகத் தயாரித்து கொள்ள வேண்டும்.
பிரியாணி செய்முறை
அடுத்து ஒரு பெரிய குக்கரை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் மற்றும் நெய் ஊற்றி சூடாக்க வேண்டும். எண்ணெய் மற்றும் நெய் சூடானதும் பட்டை, கிராம்பு, அன்னாசிப்பூ, ஏலக்காய், ஜாவித்திரி, பிரியாணி இலை மற்றும் கசூரி மெத்தி ஆகியவற்றைச் சேர்த்து தாளிக்க வேண்டும்.
பின்னர் நறுக்கிய வெங்காயத்தைச் சேர்த்து நன்கு வதக்க வேண்டும். அதனுடன் இஞ்சி–பூண்டு விழுது சேர்த்து, பச்சை வாசனை போகும் வரை வதக்க வேண்டும்.
அடுத்து அரைத்து வைத்துள்ள மசாலா விழுதைச் சேர்த்து, அதன் பச்சை வாசனை போகும் வரை நன்கு வதக்க வேண்டும். பின்னர் தயிரைச் சேர்த்து நன்கு கிளறி, நிறம் மாறும் வரை வதக்க வேண்டும்.
அதன் பின் நறுக்கிய தக்காளியைச் சேர்த்து, தேவையான அளவு உப்பு போட்டு, தக்காளி மென்மையாகும் வரை வதக்க வேண்டும். ஊற வைத்துள்ள மீல் மேக்கரில் இருக்கும் தண்ணீரை நன்கு பிழிந்து நீக்கிவிட்டு, அதை குக்கரில் சேர்த்து நன்கு கிளற வேண்டும்.

பின்னர் மஞ்சள் தூள், மல்லித் தூள் மற்றும் தயாரித்து வைத்துள்ள பிரியாணி மசாலா பொடியில் இருந்து 1 டேபிள் ஸ்பூன் சேர்த்து நன்கு கிளற வேண்டும். அடுத்து 3 கப் தண்ணீர் ஊற்றி நன்கு கொதிக்க வைக்க வேண்டும்.
தண்ணீர் நன்கு கொதிக்கத் தொடங்கியதும், எலுமிச்சைச் சாற்றைச் சேர்த்து கலக்க வேண்டும். பின்னர் ஊற வைத்த அரிசியின் தண்ணீரை முழுமையாக வடித்துவிட்டு, அரிசியை குக்கரில் சேர்த்து மெதுவாகக் கிளற வேண்டும்.
உப்பின் சுவையைப் பார்த்து, தேவையானால் மேலும் சிறிதளவு உப்பு சேர்த்து கலக்க வேண்டும். பின்னர் குக்கரை மூடி, குறைந்த தீயில் வைத்து 1 விசில் விட வேண்டும்.
விசில் வந்ததும் 2 நிமிடங்கள் கழித்து அடுப்பை அணைத்துவிட வேண்டும். குக்கரில் உள்ள அழுத்தம் முழுமையாகக் குறைந்ததும் மூடியைத் திறந்மதால் அவ்வளவு தான் மணமும் சுவையும் நிறைந்த மீல் மேக்கர் பிரியாணி தயார்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |