ஆரோக்கியமும் சுவையும் நிறைந்த மலேசிய ஸ்டைல் முட்டை சம்பல் - பண்ணலாமா?
குறைந்த விலையில் எளிதாகக் கிடைக்கும், அதேநேரம் சத்துக்கள் நிறைந்த உணவுகளைப் பட்டியலிட்டால், அதில் முட்டைக்கு எப்போதும் தனி இடம் உண்டு. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பெரும்பாலானோர் விரும்பி சாப்பிடும் முட்டை, உடலுக்குத் தேவையான உயர்தர புரதத்தை வழங்கும் சிறந்த உணவாகக் கருதப்படுகிறது.
இதில் உள்ள புரதம் தசைகளின் வளர்ச்சிக்கும், சேதமடைந்த செல்களைச் சீரமைப்பதற்கும் உதவுவதுடன், உடலின் பல்வேறு முக்கிய செயல்பாடுகளுக்கும் துணைபுரிகிறது.

அதுமட்டுமல்லாமல், முட்டையில் காணப்படும் வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் எலும்புகளின் வலிமையைப் பாதுகாக்கவும், கூந்தல் வளர்ச்சிக்கும், இதய ஆரோக்கியத்திற்கும், சருமத்தின் இயற்கையான பொலிவைப் பேணுவதற்கும் உதவுகின்றன.
இப்படி பல்வேறு ஆரோக்கிய நன்மைகளைக் கொண்ட முட்டையை வழக்கமான முறையில் சமைப்பதற்குப் பதிலாக, சற்று வித்தியாசமாகவும் சுவையாகவும் தயாரித்துப் பார்க்கலாமே.
அந்த வகையில், மலேசிய ஸ்டைலில் தயாரிக்கப்படும் சுவையான முட்டை சம்பலை வீட்டிலேயே எளிமையாக எப்படிச் செய்வது என்பதை இந்தப் பதிவில் பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்
சம்பல் மசாலா அரைக்க
1 பெரிய வெங்காயம்
5 சின்ன வெங்காயம் – (தோல் நீக்கி முழுதாக)
15 காஷ்மீரி மிளகாய்
10 பூண்டு பல்
1 இன்ச் இஞ்சி
4 ஸ்பூன் எண்ணெய்
தண்ணீர் - (தேவையான அளவு)

முட்டையை வறுக்க
4 வேகவைத்த முட்டைகள்
1 ஸ்பூன் எண்ணெய்
½ ஸ்பூன் மிளகாய்த் தூள்
½ ஸ்பூன் மிளகுத் தூள்
½ ஸ்பூன் மஞ்சள் தூள்
½ ஸ்பூன் உப்பு
மற்ற பொருட்கள்
4 ஸ்பூன் எண்ணெய்
2 ஸ்பூன் புளிக்கரைசல்
1 ஸ்பூன் நாட்டுச் சர்க்கரை
தேவையான அளவு உப்பு
1 கப் தண்ணீர்
1 பெரிய வெங்காயம் (நறுக்கியது)
2 பச்சை மிளகாய் (கீறியது)

செய்முறை
முதலில் காஷ்மீரி மிளகாயை வெதுவெதுப்பான தண்ணீரில் சுமார் 10 நிமிடங்கள் ஊற வைத்த தனியாக எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும்.
அதனையடுத்து, ஊறிய மிளகாயுடன் சம்பல் மசாலாவுக்குத் தேவையான வெங்காயம், சின்ன வெங்காயம், பூண்டு, இஞ்சி ஆகியவற்றை மிக்ஸி ஜாரில் சேர்க்க வேண்டும்.
அதனுடன் எண்ணெய் மற்றும் தண்ணீர் சேர்த்து, சற்று கொரகொரப்பான விழுதாக அரைத்துக் கொள்ள வேண்டும்.

அதனையடுத்து ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து 1 ஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானதும் வேகவைத்த முட்டைகளைச் சேர்த்து லேசாக வறுக்க வேண்டும்.
அதனையடுத்து உப்பு, மிளகாய்த் தூள், மஞ்சள் தூள் மற்றும் மிளகுத் தூள் சேர்த்து முட்டைகளுடன் நன்றாகக் கலக்கவும். முட்டைகள் நன்றாக வறுபட்டதும் அவற்றை ஒரு கிண்ணத்தில் எடுத்து தனியாக வைக்கவும்.
அதே கடாயில் 4 ஸ்பூன் எண்ணெய் ஊற்றி, அரைத்து வைத்துள்ள சம்பல் விழுதைச் சேர்க்கவும். மிதமான தீயில் சுமார் 5 நிமிடங்கள் நன்றாக வதக்கவும்.
பின்னர் நாட்டுச் சர்க்கரை, புளிக்கரைசல் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து, எண்ணெய் பிரிந்து வரும் வரை நன்றாக வதக்கவும்.

இப்போது 1 கப் தண்ணீர் சேர்த்து நன்றாகக் கலக்கவும். மிதமான தீயில் குழம்பு சற்று கெட்டியாகி, மேலே எண்ணெய் பிரிந்து வரும் வரை சமைக்கவும்.
அதன் பிறகு நறுக்கிய பெரிய வெங்காயம் மற்றும் கீறிய பச்சை மிளகாயைச் சேர்த்து, வெங்காயம் சற்று வதங்கும் வரை கிளறிவிட வேண்டும்.
இறுதியாக வறுத்த முட்டைகளைச் சேர்த்து, சம்பல் கலவையுடன் முட்டைகள் நன்றாகக் கலக்கும் வரை மெதுவாகக் கிளறவும். அவ்வளவுதான்! சுவையான மலேசியா முட்டை சம்பல் தயார்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |