நோயெதிர்பு மண்டலத்தை வலுப்படுத்தும் கொத்தமல்லி காரகுழம்பு!
kothamalli kara kulambu : தென்னிந்திய சமையலில் கொத்தமல்லிக்கு தனி இடம் உண்டு. அதன் மணமும் சுவையும் காரணமாக, பிரியாணி முதல் ரசம் வரை பல்வேறு உணவுகளில் இது தவறாமல் இடம்பெறுகிறது.
சுவையைத் தருவதுடன், கொத்தமல்லி பல்வேறு ஆரோக்கிய நன்மைகளையும் கொண்டுள்ளது. இதில் வைட்டமின் ஏ, வைட்டமின் சி, நார்ச்சத்து, இரும்புச்சத்து, மாங்கனீஸ் மற்றும் கால்சியம் போன்ற முக்கிய ஊட்டச்சத்துக்கள் உள்ளன.

கொத்தமல்லியை தினசரி உணவில் சேர்த்துக்கொள்வது நோய் எதிர்ப்பு சக்தியை ஆதரிக்கவும், செரிமானத்தை சீராக்கவும் உதவக்கூடும்.
குறிப்பாக, இதில் உள்ள நார்ச்சத்து மலச்சிக்கலைக் குறைக்க உதவுகிறது. வழக்கமாக சட்னி மற்றும் அலங்காரத்திற்குப் பயன்படுத்தும் கொத்தமல்லியை, இந்த முறை சுவையான காரக் குழம்பாக செய்து பாருங்கள். சுவையும் ஆரோக்கியமும் நிறைந்த இந்த உணவு வீட்டில் அனைவருக்கும் பிடிக்கும்.

தேவையான பொருட்கள்
கொத்தமல்லி இலை -1 கப்
புளி - சிறிதளவு
சாம்பார் பொடி -1 மேசைக்கரண்டி
மஞ்சள் தூள் -¼ தே.கரண்டி
மிளகாய் தூள் - 1 மேசைக்கரண்டி
சின்ன வெங்காயம் -10
பூண்டு பல் -10
வெல்லம் - ¼ தே.கரண்டி
உப்பு - தேவையான அளவு
[RVMHY ]
தாளிக்க தேவையானவை
எண்ணெய் - 2 மேசைக்கரண்டி
கடுகு - ½ தே.கரண்டி
வெந்தயம் - ¼ தே.கரண்டி
உளுத்தம் பருப்பு - 1 தே.கரண்டி
துவரம் பருப்பு - 1 தே.கரண்டி
சீரகம் - 1 தே.கரண்டி
கறிவேப்பிலை - 1 கொத்து

செய்முறை
முதலில் புளியை சூடான நீரில் சுமார் 20 நிமிடங்கள் ஊறவைக்கவும். பின்னர் நன்றாகப் பிசைந்து, வடிகட்டி புளிச்சாறை தனியாக எடுத்துவைக்கவும்.
அடுத்து சின்ன வெங்காயம் மற்றும் பூண்டை பொடியாக நறுக்கி வைத்துக்கொள்ளவும். கொத்தமல்லி இலைகளை சிறிதளவு தண்ணீர் சேர்த்து மிக்சியில் மிருதுவாக அரைத்து தனியாக வைத்துக்கொள்ளவும்.
இப்போது ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடாக்கவும். எண்ணெய் சூடானதும் கடுகைச் சேர்த்து தாளிக்கவும்.

கடுகு பொரிந்ததும் வெந்தயம், உளுத்தம்பருப்பு, துவரம்பருப்பு, சீரகம் மற்றும் கறிவேப்பிலையைச் சேர்த்து நல்ல மணம் வரும் வரை வதக்கவும்.
பின்னர் நறுக்கிய சின்ன வெங்காயம் மற்றும் பூண்டைச் சேர்த்து மிதமான தீயில் சுமார் 2 நிமிடங்கள் வதக்கவும். பூண்டின் நறுமணம் நன்றாக வந்ததும் புளிச்சாறு, சாம்பார் பொடி, மிளகாய்த்தூள், மஞ்சள்தூள், உப்பு மற்றும் அரைத்த கொத்தமல்லி விழுதைச் சேர்த்து நன்றாகக் கலக்கவும்.
இதனுடன் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து நன்றாகக் கொதிக்கவிடவும். குழம்பு நன்றாகக் கொதித்து சற்று சுண்டி கெட்டியான பதத்திற்கு வந்ததும் வெல்லத்தைச் சேர்த்து கலந்து, ஓரிரு நிமிடங்கள் கொதிக்கவிட்டு அடுப்பை அணைக்கவும். அவ்வளவுதான்! மணமும் சுவையும் நிறைந்த, ஆரோக்கியமான கொத்தமல்லி காரக்குழம்பு தயார்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |