அசைவமே தோற்றுப்போகும் சுவையில் கொண்டைக்கடலை பிரியாணி... எப்படி செய்வது?
பெரும்பாலான இந்துக்கள் வீடுகளில் நவராத்தி முடியும் வரையிலும் அசைவம் சமைக்க மாட்டார்கள். ஆனால் சைவத்தை அடியோடு வெறுக்கும் ஒரு நபராவது ஒரு குடும்பத்தில் நிச்சயம் இருப்பார்.
அப்படியானர்களையும் திருப்திப்படுத்தணுமா? வீட்டில் உள்ள சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரையில் அனைவரும் விரும்பி சாப்பிடும் வகையில், அசைவமே தோற்றுப்போகும் அளவுக்கு கொண்டைக்கடலையை வைத்து அசத்தல் சுவையில் பிரியாணி செய்வது எப்படி என இந்த பதிவில் பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
மசாலாவிற்கு தேவையானவை
பட்டை - 4 துண்டு
கிராம்பு - 4
ஏலக்காய் - 4
அன்னாசிப்பூ - 1
பூண்டு - 4 பல்
இஞ்சி - 2 இன்ச்
பச்சை மிளகாய் - 6
புதினா - 1 கையளவு
கொத்தமல்லி - 1 கையளவு
பிரியாணிக்கு தேவையானவை
கொண்டைக்கடலை - 1 கப்
நெய் - 4 மேசைக்கரண்டி
சோம்பு - 1தே.கரண்டி
பிரியாணி இலை - 2
வெங்காயம் - 2
தக்காளி - 1
மஞ்சள் தூள் - 1/2 தே.கரண்டி
மிளகாய் தூள் - 1 தே.கரண்டி
மல்லித் தூள் - 2 தே.கரண்டி
தயிர் - 2 மேசைக்கரண்டி
உப்பு - சுவைக்கேற்ப
சீரக சம்பா அரிசி - 2 கப் (நீரில் 20 நிமிடம் ஊற வைத்தது)
தண்ணீர் - 3 கப்
செய்முறை
முதலில் கொண்டைக்கடலையை சுடுநீரில் போட்டு 5 தொடக்கம் 6 மணிநேரம் வரையில், நன்றாக ஊறவிட்டு எடுத்துக்கொள்ள வேண்டும்.
அதனையடுத்து ஊறவைத்த கொண்டைக்கடலையை குக்கரில் போட்டு, தேவையான அளவு தண்ணீரை் ஊற்றி, சிறிதளவு உப்பு சேர்த்து நன்றாக கலந்துவிட்டு குக்கரை மூடி 5-6 விசில் விட்டு இறக்கிக் ஆறவிட வேண்டும்.
வெப்பம் தனிந்ததும் குக்கரைத் திறந்து, கொண்டைக்கடலையை மிக்சர் ஜாரில் போட்டு ஒன்றிரண்டாக அரைத்து தனியாக ஒரு பாத்திரத்துக்கு மாற்றிக்கொள்ள வேண்டும்.
அதனையடுத்து சீரக சம்பா அரிசியை தண்ணீரில் 2 முறை நன்றாக கழுவிய பின்னர் அதில் தண்ணீரை ஊற்றி, 20 நிமிடங்கள் வரையில் நன்றான ஊறவிட வேண்டும்.
பின்னர் ஒரு ஈரமில்லாத மிக்சர் ஜாரில் பட்டை, கிராம்பு, ஏலக்காய், அன்னாசிப்பூ ஆகியவற்றை சேர்த்து நன்றாக பொடித்து எடுத்துக்கொள்ள வேண்டும்.
பின் அதில் பூண்டு, இஞ்சி, பச்சை மிளகாய், புதினா, கொத்தமல்லி ஆகியவற்றை சேர்த்து நன்றாக அரைத்து தனியாக ஒரு கிண்ணத்தில் எடுத்துக்கொள்ள வேண்டும்.
அதனையடுத்து ஒரு அகலமான பிரியாணி பாத்திரத்தை அடுப்பில் வைத்து, அதில் நெய் ஊற்றி சூடானதும், சோம்பு, பிரியாணி இலை சேர்த்து தாளித்து, நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து பொன்நிறமாக வதக்கிக்கொள்ள வேண்டும்.
பின்னர் அதனுடன் புதினா விழுதையும் சேர்த்து பச்சை வாசனை போகும் வரையில் நன்றாக வதக்கிக்கொள்ள வேண்டும்.
பின்னர் அதில் நறுக்கிய தக்காளி மஞ்சள் தூள், மிளகாய் தூள், மல்லித் தூள் ஆகியவற்றை சேர்த்து, தக்காளி மென்மையாகும் வரையில் வதக்கி, அதில் தயிரையும் சேர்த்து நன்றாக கிளறிவிட்டு சுவைக்கேற்ப உப்பு தூவி, எண்ணெய் பிரிந்து வரும் வரையில் நன்றாக வதங்கவிட வேண்டும்.
பின்னர் ஏற்கனவே பொடித்து வைத்த கொண்டைக்கடலையை சேர்த்து நன்றாக கிளறிவிட்டு, 3 கப் தண்ணீரை ஊற்றி, அது கொதிக்க ஆரம்பித்ததும், அதில் ஊற வைத்துள்ள அரிசியையும் சேர்த்து கிளறிவிட்டு, மூடி வைத்து மிதமான தீயில் 10 நிமிடங்கள் வரையில் வேகவிட வேண்டும்.
10 நிமிடங்களின் பின்னர் மூடியைத் திறந்து, அரிசியை ஒருமுறை நன்றாக கிளறிவிட்டு, மற்றொரு அடுப்பில் ஒரு தோசைக்கல்லை வைத்து, அதன் மேல் இந்த பிரியாணி பாத்திரத்தை வைத்து, குறைவான தீயில் வைத்து 20 நிமிடம் தம் போட்டு இறக்கினால், அவ்வளவு தான் அருமையான சுவையில், ஆரோக்கிய நன்மைகளையும் அள்ளிக்கொடுக்கும் கொண்டைக்கடலை பிரியாணி தயார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |