செரிமானம் முதல் உடல் எடை கட்டுப்பாடு வரை - கொத்தமல்லி காரகுழம்பின் அற்புதம்!
kothamalli kara kulambu recipe : தென்னிந்திய உணவுகளில் கொத்தமல்லி இலைகளுக்கு எப்போதும் தனி இடம் உண்டு. உணவுக்கு நல்ல மணத்தையும் சுவையையும் கொடுக்கும் கொத்தமல்லியில் பல்வேறு ஊட்டச்சத்துக்களும் நிறைந்து காணப்படுகின்றது.
கொத்தமல்லி இலைகளில் வைட்டமின் ஏ, வைட்டமின் சி, இரும்புச்சத்து, கால்சியம், மாங்கனீஸ் மற்றும் நார்ச்சத்துக்கள் காணப்படுகின்றன. இவை உடலின் ஆரோக்கியத்தைப் பராமரிக்க உதவுகின்றன.

குறிப்பாக, கொத்தமல்லியில் உள்ள நார்ச்சத்து செரிமானத்தை சீராக வைத்திருக்கவும், மலச்சிக்கல் ஏற்படுவதைத் தடுக்கவும் உதவுகிறது.
மேலும், சத்தான உணவின் ஒரு பகுதியாக இதனைச் சேர்த்துக்கொள்வது உடல் எடையைக் கட்டுப்படுத்தவும் உதவலாம். வழக்கமாக கொத்தமல்லியை சட்னியாகவோ, துவையலாகவோ பயன்படுத்துவதை விட, ஒருமுறை சுவையான காரக் குழம்பாகச் செய்து பாருங்கள்.

தேவையான பொருட்கள்
கொத்தமல்லி இலை – 1 கப்
புளி – சிறிதளவு
சாம்பார் தூள் – 1 மேசைக்கரண்டி
மிளகாய்த்தூள் – 1 மேசைக்கரண்டி
மஞ்சள்தூள் – ¼ தேக்கரண்டி
சின்ன வெங்காயம் – 10
பூண்டு– 10 பல்
வெல்லம் – ¼ தேக்கரண்டி
உப்பு – தேவையான அளவு
தாளிக்கத் தேவையானவை

எண்ணெய் – 2 மேசைக்கரண்டி
கடுகு – ½ தேக்கரண்டி
வெந்தயம் – ¼ தேக்கரண்டி
உளுத்தம் பருப்பு – 1 தேக்கரண்டி
துவரம் பருப்பு – 1 தேக்கரண்டி
சீரகம் – 1 தேக்கரண்டி
கறிவேப்பிலை – 1 கொத்து

செய்முறை
முதலில் புளியை வெதுவெதுப்பான நீரில் சுமார் 20 நிமிடங்கள் ஊறவைக்கவும். பின்னர் நன்றாகக் கரைத்து வடிகட்டி, புளிச்சாற்றைத் தனியாக எடுத்து வைத்துக்கொள்ளவும்.
சின்ன வெங்காயம் மற்றும் பூண்டைச் சிறிய துண்டுகளாக நறுக்கி வைத்துக்கொள்ளவும். அதனையடுத்து கொத்தமல்லி இலைகளை நன்றாகச் சுத்தம் செய்து, சிறிதளவு தண்ணீர் சேர்த்து மிக்ஸியில் விழுதாக அரைத்துக்கொள்ள வேண்டும்.
ஒரு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு சேர்க்கவும். கடுகு பொரிந்ததும் வெந்தயம், உளுத்தம் பருப்பு, துவரம் பருப்பு, சீரகம் மற்றும் கறிவேப்பிலை சேர்த்து நன்றாகத் தாளிக்கவும்.

அடுத்து நறுக்கிய சின்ன வெங்காயம் மற்றும் பூண்டைச் சேர்த்து நன்றாக வதக்கவும். வெங்காயம் வதங்கி, பூண்டின் பச்சை வாசனை நீங்கியதும் புளிச்சாறு, சாம்பார் தூள், மிளகாய்த்தூள், மஞ்சள்தூள் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்துக் கலந்துவிட வேண்டும்.
இப்போது அரைத்து வைத்துள்ள கொத்தமல்லி விழுதைச் சேர்த்து நன்றாகக் கலக்கவும். தேவையான அளவு தண்ணீர் ஊற்றி மிதமான தீயில் கொதிக்கவிட வேண்டும்.
குழம்பு நன்றாகக் கொதித்து, ஓரளவு கெட்டியானதும் சிறிதளவு வெல்லம் சேர்த்துக் கலந்துவிட்டு, மேலும் சில நிமிடங்கள் கொதிக்கவிட்டு இறக்கினால் அவ்வளவு தான் மணமும் சுவையும் நிறைந்த கொத்தமல்லி காரக் குழம்பு தயார்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |