வீட்டில் முட்டை இருக்கா? இந்த தேங்காய்ப்பால் முட்டை கறி செய்து பாருங்க
வீட்டில் பொதுவாக எப்போவாது முட்டை கறி செய்வது வழக்கம். அதற்கு நாம் எப்போதும் செய்வதை போல மசாலா முட்டை கறி செய்யாமல் இந்த தடவை தேங்காய் பால் முட்டை கறி செய்து பார்க்கலாம்.
இது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் சாப்பிடலாம். சாப்பிடுவதற்கு காரம் சரியாக இருக்கும். செய்முறையை பார்க்கலாம் வாங்க.
தேவையான பொருட்கள்
- தேங்காய் எண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன்
- கடுகு – கால் ஸ்பூன்
- உளுந்து – கால் ஸ்பூன்
- சீரகம் – கால் ஸ்பூன்
- பூண்டு – 10 பல் (பொடியாக நறுக்கியது)
- இஞ்சி – அரை இன்ச் (பொடியாக நறுக்கியது)
- பச்சை மிளகாய் – 2
- கறிவேப்பிலை – ஒரு கொத்து
- பெரிய வெங்காயம் – 1 (நீளவாக்கில் நறுக்கியது)
- மஞ்சள் தூள் – கால் ஸ்பூன்
- மிளகாய்த் தூள் – ஒரு ஸ்பூன்
- மல்லித் தூள் – ஒரு ஸ்பூன்
- சீரகத் தூள் – ஒரு ஸ்பூன்
- உப்பு – தேவையான அளவு
- முட்டைகள் – 4
- மிளகு
- சீரகத்தூள் - அரை ஸ்பூன்
- தேங்காய்ப் பால் – ஒரு கப்
- கரம் மசாலாத் தூள் – அரை ஸ்பூன்
- மல்லித் தழை – சிறிதளவு
செய்முறை
ஒரு பாத்தில் எண்ணெய் சேர்த்து அது சூடானவுடன் கடுகு, உளுந்து, சீரகம் சேர்த்து தாளித்துக்கொள்ளவேண்டும். அடுத்து பொடியாக நறுக்கிய இஞ்சி மற்றும் பூண்டு சேர்த்து வதக்கவேண்டும்.
பச்சை வாசம் போனவுடன், அதில் பச்சை மிளகாய் மற்றும் கறிவேப்பிலை சேர்த்து மேலும் சிறிது நேரம் வதக்கவேண்டும். அடுத்து நீளவாக்கில் நறுக்கிய பெரிய வெங்காயம் சேர்த்து பொன்னிறமாகும் வரை வதக்கவேண்டும்.
அடுத்து சீரகத்தூள், மிளகாய்த் தூள், மஞ்சள் தூள், மல்லித் தூள் மற்றும் போதிய அளவு உப்பு சேர்த்து நன்றாக வதக்கவேண்டும். மசாலாவின் பச்சை வாசம் போனவுடன், அதில் அரை டம்ளர் தண்ணீர் சேர்த்து நன்றாக கொதிக்கவிடவேண்டும்.
அது நல்ல கெட்டி பதம் வரும்போது, முட்டைகளை உடைத்து சேர்க்கவேண்டும். அதன் மேல் மிளகு – சீரகத்தூளை சேர்த்துக்கொள்ளவேண்டும்.
இதை மூடியிட்டு மிதமான தீயில் வேகவைக்கவேண்டும். தேங்காய்த் துருவலை மிக்ஸி ஜாரில் சேர்த்து தேங்காய்ப் பாலை பிழிந்து எடுத்துக்கொள்ளவேண்டும்.
முட்டை மசாலாவுடன் சேர்ந்து வெந்தவுடன் அதில் இந்த தேங்காய்ப் பாலை சேர்க்கவேண்டும். தேங்காய்ப் பால் சேர்த்து மூடிபோட்டு 5 நிமிடங்கள் கொதிக்க விடவேண்டும்.
கடைசியாக, கரம் மசாலாத் தூள் மற்றும் பொடியாக நறுக்கிய மல்லித்தழை தூவி இறக்கினால் சூப்பர் சுவையான தேங்காய்ப் பால் முட்டை கிரேவி தயார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |