சாலையில் ஒருபுறம் முழுஊரடங்கு... மறுபுறம் தளர்வுகளுடன் ஊரடங்கு! பளீச்சென்று விளக்கிய புகைப்படம்
கொரோனா ஊரடங்கில் தமிழகம் மற்றும் புதுச்சேரியின் நிலையினை மிகத் தெளிவாக புகைப்படம் ஒன்று விளக்கியுள்ளது.
இந்தியாவில் கொரோனாவில் இரண்டாவது அலை பெரும் தாக்கத்தினை ஏற்படுத்தியுள்ள நிலையில், தமிழகத்தில் முழுஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
ஆனால் புதுச்சேரியில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த இரு உத்தரவையும் புதுச்சேரியின் குறிப்பிட்ட ஒரு பகுதியில் நேரடியாக வித்தியாசமான காட்சியாக பார்க்க முடிகிறது.
புதுச்சேரி-விழுப்புரம் சாலை திருக்கனூரில் இந்த காட்சியை பார்க்க முடியும். இரண்டு சாலைகளாக பிரிக்கப்பட்டுள்ள இந்த பகுதியில் திருக்கனூர் பகுதி புதுச்சேரியை சேர்ந்தது. சித்தலம்பட்டு பகுதி விழுப்புரம் மாவட்டத்திற்கு உட்பட்ட பகுதியாகும்.
இதனால் சாலையின் ஒருபுறம் கடைகள் அனைத்தும் திறந்திருந்து வாகன போக்குவரத்துடன் பரபரப்புடன் காணப்பட்டது. ஆனால் மறுபுறம் கடைகள் அடைக்கப்பட்டு வாகன போக்குவரத்து இன்றி வெறிச்சோடி காணப்படுகின்றது.
தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் புதுச்சேரி தளர்வு ஊடரங்கினைப் பயன்படுத்தி மளிகை மற்றும் காய்கள் வாங்குவதற்கு சென்று குவிந்து வருகின்றனர்.
இதுகுறித்து புதுச்சேரி மக்கள் கூறுகையில், தமிழகம், புதுச்சேரி பகுதிகளில் ஒரே நேரத்தில் ஊரடங்கு பிறப்பித்தால் மட்டுமே நோயினைத் தடுக்க முடியும். இதனால் இரு மாநில அரசுகளும் இணைந்து செயல்பட வேண்டும் என்றும் தங்களது கருத்தினைக் கூறியுள்ளனர்.
