தமிழக அரசின் மாதம் ஆயிரம் ரூபாய்.... யாருக்கு கிடைக்கும்? யாருக்கு கிடைக்காது?
இந்திய மாநிலமான தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின் தான் பதவியேற்று மக்களுக்கு ஒவ்வொரு திட்டமாக அமல்படுத்தி வருகின்றார்.
அந்த வகையில் குடும்பத் தலைவிகளுக்கு மாதம்தோறும் 1000 ரூபாய் வழங்கும் திட்டத்தை எப்பொழுது அமல்படுத்துவார்கள் என்ற எதிர்பார்ப்பு மக்களிடையே அதிகரித்துள்ளது.
மேலும் இந்த 1000 ரூபாய் எந்த குடும்ப அட்டதாரர்களுக்கு கிடைக்கும் என்பதில் பாரிய குழப்பம் ஏற்பட்டுள்ளநிலையில், பலரும் தங்களது குடும்ப அட்டையினை மாற்றவும், மேலும் புதிய அட்டைகள் பெறுவதற்கு குவிந்து வருகின்றனர்.
தமிழக அரசின் சலுகைகள் உரியவர்களுக்கு கிடைக்கும் வகையில் அவர்களின் வருவாயை பொறுத்து 5 வகையாக குடும்ப அட்டைகள் தரம் பிரிக்கப்பட்டுள்ளன.
PHH என்ற குறியீடு எண் கொண்ட குடும்ப அட்டைக்கு அரிசி உட்பட அனைத்து பொருட்களும் கிடைக்கும், PHH-AAYஎன்ற குறியீடு கொண்ட குடும்ப அட்டைக்கு 35 கிலோ அரிசி உட்பட அனைத்து பொருட்களும் கிடைக்கும். NPHHஎன்ற குறியீடு எண் கொண்ட குடும்ப அட்டைக்கு அரிசி உட்பட அனைத்து பொருட்களும் கிடைக்கும்.
NPHH-S என்ற குறியீடு இருந்தால் அந்த குடும்ப அட்டைக்கு அரிசி கிடைக்காது. அதை தவிர சர்க்கரை உள்ளிட்ட மற்ற பொருள்கள் கிடைக்கும். NPHH-NCஎன்ற குறியீடு இருந்தால் எந்த பொருளுமே கிடைக்காது. இதை ஒரு அடையாளமாகவும், முகவரி சான்றாக மட்டுமே பயன்படுத்திக் கொள்ள முடியும்.
தற்போது அரசு அறிவிக்கவிருக்கும் இந்த ஆயிரம் ரூபாய் திட்டமானது PHH, PHH-AAY, NPHH ஆகிய குறியீடுகளை கொண்ட குடும்ப அட்டைகளுக்கு கிடைக்கும் என்றும், NPHH-S, NPHH-NC, என்ற குறியீடுகளை கொண்ட குடும்ப அட்டைகளுக்கு மட்டுமே கிடைக்காது என்றும் தகவல் வெளியாகியுள்ளது.
ஆனாலும் தமிழக அரசின் அறிவிப்பாணை வந்த பிறகுதான் முழு விபரங்கள் தெரியவரும் என்று அதிகாரிகள் கூறிவருகின்றனர்.