உயிருக்கு போராடும் தனது படத்தின் ஹீரோவைப் பார்த்து கண் கலங்கிய பாரதிராஜா
மருத்துவமனையில் நடிகர் பாபுவை சந்தித்த இயக்குநர் பாரதிராஜா கண் கலங்கியுள்ளார். பாரதிராஜா இயக்கத்தில் 1990-ம் ஆண்டு வெளியான என் உயிர் தோழன் படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானவர் பாபு.
அதைத்தொடர்ந்து பெரும் புள்ளி, தாயம்மா, பொண்ணுக்கு சேதி வந்தாச்சு உள்ளிட்ட சில படங்களில் நடித்த அவர் படப்பிடிப்பில் சண்டைக்காட்சியில் நடிக்கும் போது தவறி விழுந்து முதுகு தண்டுவடத்தில் பலத்த அடிபட்டது. இதையடுத்து திரைத்துறையில் இருந்து ஒதுங்கிய அவர் 20 ஆண்டுகளுக்கும் மேலாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
நடிப்பைத் தாண்டி வசனகர்த்தாவாகவும் பணியாற்றிய பாபு 1997-ம் ஆண்டு பிரகாஷ்ராஜ் நடித்த ‘ஸ்மைல் ப்ளீஸ்’ படத்திலும் பணியாற்றியுள்ளார். ஆனால் அத்திரைப்படம் திரைக்கு வரவில்லை. அதேபோல் நடிகர் பொன்வண்ணன் தனது நண்பரான பாபுவின் வாழ்க்கையை ஆவணப்படமாக எடுக்க முயன்று அது முடியாமல் போனது.
தற்போது வரை மருத்துவமனையில் படுத்த படுகையாக இருந்து சிகிச்சை பெற்று வரும் நடிகர் பாபுவை பாரதிராஜா நேரில் சந்தித்து கண் கலங்கியுள்ளார். இதுகுறித்த வீடியோ ஒன்று சமூகவலைதளத்தில் வெளியாகியுள்ளது.
அதில் தன் அருகில் தன்னை ஹீரோவாக்கிய இயக்குநரிடம் நடிகர் பாபு பேசிக் கொண்டே இருக்கிறார்.