இங்கிலாந்து பவுலர்களை சிதறடித்த மிட்செல்.. 5 விக்கெட் வித்தியாசத்தில் நியூசிலாந்து அபார வெற்றி!
ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்துவரும் டி20 உலக கோப்பை தொடரில் சூப்பர் 12 சுற்று முடிவடைந்த நிலையில், இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, பாகிஸ்தான் மற்றும் நியூசிலாந்து ஆகிய 4 அணிகளும் அரையிறுதிக்கு முன்னேறின.
இதனிடையே, இன்று அபுதாபியில் நடக்கும் முதல் அரையிறுதி போட்டியில் இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதின.
டாஸ் வென்று நியூசிலாந்து அணி பந்து வீச்சு தேர்வு செய்தது. இதனால் முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி 20 ஓவர்கள் முடிவில் 166 ரன்கள் எடுத்தது.
டேவிட் மாலன் 30 பந்தில் 41 ரன்களும், மொயீன் அலி ஆட்டமிழக்காமல் 37 பந்தில் 51 ரன்கள் சேர்த்தனர்.
3-வது விக்கெட்டுக்கு இந்த ஜோடி 63 ரன்கள் சேர்த்தது. நியூசிலாந்து அணி சார்பில் டிம் சவுத்தி, ஆடம் மில்னே, இஷ் சோதி, ஜேம்ஸ் நீஷம் ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.
இந்நிலையில் 167 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் நியூசிலாந்து களம் இறங்கியது.
மார்ட்டின் கப்தில், டேரில் மிட்செல் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். முதல் பந்தை பவுண்டரிக்கு விரட்டிய மார்ட்டின் கப்தில் 3-வது பந்தில் வெளியேறினார்.
பின்னர், வந்த கேப்டன் கேன் வில்லியம்சன் 11 பந்துகளை சந்தித்து 5 ரன்கள் எடுத்த நிலையில் ஏமாற்றம் அளித்தார்.
இதைத்தொடர்ந்து, கடைசி வரை நின்று அதிரடியாக விளையாடிய மிட்செல் கிறிஸ் வோக்ஸ் வீசிய இந்த ஓவரில் அடுத்தடுத்து இரண்டு சிக்ஸ் விளாசினார்.
கடைசி பந்தை பவுண்டரிக்கு விரட்ட நியூசிலாந்து 19 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 167 ரன்கள் எடுத்து 5 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றதுடன், இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது.