“13 தங்க பதக்கம்” இலங்கை தமிழ்பெண் தர்ஷிகா சாதனை
கொழும்பு பல்கலைக்கழகத்தின் மருத்துவ பீட பட்டமளிப்பு விழாவின் போது, முதன்நிலை மற்றும் சிறந்த பெறுபேறுகளைப் பெற்றுக் கொண்ட பட்டதாரிகளுக்கென வழங்கப்படும் 37 தங்கப் பதக்கங்களில் 13 பதக்கங்களை பெற்று தமிழ் பெண் ஒருவர் சாதனை படைத்துள்ளார்.
இலங்கையின் கிழக்கு மாகாணம் அக்கரைப்பற்று பிரதேசத்தைச் சேர்ந்த தர்ஷிகா தணிகாசலம் என்பவரே இந்த வியப்பு மிகுந்த சாதனையை நிகழ்தியுள்ளார்.
இலங்கையிலுள்ள பல்கலைக்கழங்களில் முதன்நிலைப் பல்கலைக்கழகம் என தரப்படுத்தப்பட்டுள்ள, கொழும்பு பல்கலைக்கழகத்தின் மருத்துவ பீடத்தில் பட்டம் பெற்றவர் தர்ஷிகா.
பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில், கொழும்பு பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழா இம்மாதம் நடைபெற்றபோது, தனது பட்டத்துடன் 13 தங்கப் பதக்கங்களையும் தர்ஷிகா பெற்றுக் கொண்டார்.
ஐந்து வருடங்களைக் கொண்ட மருத்துவ பீடக் கற்கையில் வெளிக்காட்டிய திறமைகளுக்காக, இந்தப் பதக்கங்கள் அவருக்கு வழங்கப்பட்டன.
சிறந்த மருத்துவபீட மாணவி, எம்.பி.பி.எஸ் இறுதியாண்டு பரீட்சையில் பெற்றுக் கொண்ட சிறந்த பெறுபேறு, சிகிச்சை மருத்துவத்தில் சிறப்பினை வெளிப்படுத்தியமை மற்றும் அறுவை சிகிச்சையில் சிறப்பான பெறுபேற்றினை அடைந்து கொண்டமை உள்ளிட்ட 13 விடயங்களில் சிறப்புத் தேர்ச்சியினை வெளிப்படுத்தியமைக்காக இவருக்கு இந்தப் பதக்கங்கள் வழங்கப்பட்டன.
குடும்பப் பின்னணி
தர்ஷிகாவின் தந்தை தணிகாலசம் பாடசாலை அதிபராகப் பணியாற்றி ஓய்வுபெற்றுள்ளார். தாயார் குமுதா. இவர்களின் நான்கு பிள்ளைகளில் தர்ஷிகா இரண்டாமவர்.
தர்ஷிகாவின் சகோதரர்கள் அனைவரும் உயர் தரத்தில் (பிளஸ் 2) விஞ்ஞானத்துறையை தேர்ந்தெடுத்து கற்றவர்கள். தர்ஷிகாவின் அண்ணன் விஞ்ஞானத்துறையில் முதுமாணி பட்டம் பெற்றவர். தற்போது ஆராய்ச்சி விஞ்ஞானியாகப் பணியாற்றி வருகின்றார்.
மருத்துவ பீடத்தில் பட்டத்தைப் பெற்றுக் கொண்ட தர்ஷிகா தற்போது மருத்துவராக பணியாற்றத் தொடங்கியுள்ளார். இவரின் தம்பி ஸ்ரீ ஜயவர்த்தனபுர பல்கலைக்கழக மருத்துவ பீடத்தில் மூன்றாமாண்டு மாணவராக உள்ளார். தங்கையும் உயர்தரத்தில் (பிளஸ் 2) விஞ்ஞானத்துறையைக் கற்று வருகின்றார்.
பிள்ளைகள் எல்லோரும் விஞ்ஞானத் துறையைக் கற்பதற்கு பெற்றோர்களின் அழுத்தம் அல்லது விருப்பம் காரணமாக இருந்ததா என, தர்ஷிகாவின் அம்மாவிடம் கேட்டபோது; "இல்லை" என்றார். "நாங்கள் எவ்வித அழுத்தங்களையும் கொடுக்கவில்லை, விஞ்ஞானத்துறை என்பது அவர்களின் விருப்பத் தெரிவாக இருந்தது. பிள்ளைகளின் விருப்பத்தை நிறைவேற்ற பெற்றோர்களாக நாங்கள் உதவி வருகின்றோம்" என அவர் பதிலளித்தார்.
விஞ்ஞானத் துறையைக் கற்பதில் தனது அப்பாவின் குடும்பத்தினர் இயல்பாகவே ஆர்வமுடையவர்கள் என்று கூறும் தர்ஷிகா, "அம்பாறை மாவட்டம் கோளாவில் பிரதேசத்தின் முதலாவது பெண் விஞ்ஞானப் பட்டதாரி (பி.எஸ்.சி) சொர்ணசோதி, எனது அப்பாவின் தங்கை. இரண்டு வருடங்களுக்கு முன்னர் அவர் இறந்து விட்டார்" என்றார்.
அக்கரைப்பற்று ராமகிருஷ்ண மிடின் மாகா வித்தியாலயத்தில் ஆரம்பம் முதல் 05ஆம் வகுப்பு வரையிலும், 06ஆம் வகுப்பிலிருந்து 12ஆம் வகுப்பு வரை அக்கரைப்பற்று ராமகிருஷ்ணா கல்லூரியிலும் தனது பாடசாலைக் கல்வியைப் பயின்ற தர்ஷிகா, 2014ஆம் ஆண்டு கொழும்பு பல்கலைக்கழக மருத்துவ பீடத்துக்குத் தேர்வானார்.
''சிங்கள மொழி தெரியாமல் பெரும் பிரச்னை''
சாதாரண கிராமம் ஒன்றிலிருந்து தலைநகரில் அமைந்துள்ள கொழும்பு பல்கலைக்கழகத்துக்கு தெரிவுசெய்யப்பட்ட தர்ஷிகா, ஆரம்பத்தில் நகர்ப்புற வாழ்க்கையுடன் ஒத்துப் போவதில் பல்வேறு சவால்களை எதிர்கொண்டதாகக் கூறுகின்றார். "சிங்கள மொழி தெரியாமலிருந்தமை பெரும் பிரச்னையாக இருந்தது" என்கிறார்.
இருந்தபோதும் சவால்களையெல்லாம் கடந்து, ஐந்து ஆண்டுகளைக் கொண்ட மருத்துவப் படிப்பில், ஒவ்வொரு வருடமும் முதன்நிலை மாணவியாக தான் தெரிவாகி வந்ததாக பூரிப்புடன் கூறினார்.
37 பதக்கங்களில் 13 பதக்கங்கள் உங்களுக்குக் கிடைக்கும் என எதிர்பார்த்தீர்களா என தர்ஷிகாவிடம் கேட்டதற்கு, சிரித்தபடி "இல்லை" என்றார்.
தற்போது கிழக்கு மாகாணத்தின் மட்டக்களப்பு மாவட்டத்தில் தர்ஷிகா டாக்டராக நியமனம் பெற்றுள்ளார்.