திருமண நேரத்தில் குடிபோதையில் தூங்கிய மணமகன்... ஆடிப்போன மணப்பெண் எடுத்த இறுதி முடிவு;
திருமண நேரத்தில் மாப்பிள்ளை மதுபோதையில் இருந்ததால் திருமணமே நின்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
தமிழ்நாடு தர்மபுரி மாவட்டம் மாரண்டள்ளி அருகே உள்ள தொட்டபடகாண்ட அள்ளிகிராமத்தைச் சேர்ந்தவர் சரவணன் (32). இவர் அப்பகுதியில் கூலித்தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். இவருக்கும் திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் நகரைச் சேர்ந்த லட்சுமி(22) என்ற பெண்ணிற்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்தது.
இதன்பின்னர், இருவருக்கும் ஈஸ்வரன் கோவிலில் திருமணம் நடைபெறுவதாக முடிவு செய்யப்பட்டிருந்தது. காலை 6 மணி முதல் 7.30 மணி சுபமுகூர்த்த நேரத்தில் திருமணம் என்று நிச்சயிக்கப்பட்டிருந்ததால், பெண் வீட்டார் அனைவரும் மகிழ்ச்சியுடன் கோவிலுக்கு சென்றுள்ளனர்.
ஆனால், அங்கே சென்றால் மணமகன் குடும்பத்தாரோ, மணமகன் உறவினர்களோ யாரும் இல்லாததை கண்டு மணமகள் வீட்டார் அதிர்ச்சியடைந்துள்ளனர். உடனே மணமகன் வீட்டிற்கு சென்ற பெண் வீட்டார்கள், அங்கு சென்று பார்த்தப்போது சரவணன் தன்னை சுற்றி நடப்பது என்பதுகூட தெரியாத நிலையில் மது போதையில் அரை மயக்கத்தில் இருந்துள்ளார்.
இதனால், விரக்தியடைந்த மணமகள் லட்சுமி எனக்கு இந்த திருமணமே வேண்டாம், என மாலை தூக்கி விசிறியவாறு சென்றுள்ளார். ஆனால், மாப்பிள்ளை வீட்டார் முடிந்த அளவு மணமகள் வீட்டாரிடம் சமரசம் செய்தும் மணமகள், திருமணத்துக்கு முன்னரே இப்படி குடித்தவர், திருமணத்துக்கு பிறகு என்னுடைய வாழ்க்கையை நாசமாக்கி விடுவார் என்று கூறி கண்ணீர் விட்டு கதறி அழுதுள்ளார்.
அதன்பின்னர், இந்த சம்பவம் தொடர்பாக காவல் நிலையத்தில் மணமகள் வீட்டார் புகார் அளிக்க, விசாரணையில், போதை தெளிந்த சரவணன், இனிமேல் குடிக்க மாட்டேன், பெண்ணை திருமணம் செய்து கொள்கிறேன் என கண்ணீர் விட்டுள்ளார்.
ஆனால், அதற்கு போலீசார், மணப்பெண் சம்மதிக்க வேண்டும். அவரிடம் பேசி பாருங்கள் என்று கூறிவிட்டனர். உடனே சரவணன், மணமகளிடம், இனிமேல் நான் குடிக்க மாட்டேன், என்னை திருமணம் செய்து கொள் எனக்கூறி கதறி இருக்கிறார்.
ஆனாலும் அந்த பெண் ஏற்க மறுத்ததுடன், பிடிவாதமாக மாப்பிள்ளையை வேண்டாம் என்று கூறி விட்டு அங்கிருந்து தனது உறவினர்களுடன் சென்றுள்ளார்.
மேலும், போதையால் தனது திருமணமே நின்றுபோன வேதனையில் மணமகன் சரவணனை காவல்துறையினர் அறிவுரை வழி அனுப்பி வைத்திருக்கின்றனர்.