அதிபர் மாளிகையில் இருந்து தப்பியோடிய கோத்தபய ராஜபக்சே - வெடித்த போராட்டம்!
இலங்கை அதிபர் மாளிகையில் இருந்து கோத்தபய ராஜபக்சே தப்பியோடி இராணுவத் தலைமையகத்தில் பதுங்கி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
இலங்கையில், தொடர்ந்து பொருளாதார நெருக்கடி மற்றும் எரிபொருள் இல்லாத சூழல் ஆகியவற்றைத் தொடர்ந்து அதிபர் கோத்தபய ராஜபக்சே பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகியோருக்கு எதிரான போராட்டங்கள் வலுப்பெற்று வருகின்றன.
இதனிடையில், தற்போது அரசுக்கு எதிரான மாபெரும் போராட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. அதன்படி எதிர்க்கட்சிகள், தொழிற்சங்கங்கள், மாணவர் அமைப்புகள், விவசாய அமைப்புகள் போன்றவை இந்தப் போராட்டத்தில் பங்கேற்பதாக அறிவித்திருந்தன.
முதலே நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் மாணவர் அமைப்பினர் தலைநகர் கொழும்புவை நோக்கி வந்த வண்ணம் இருக்கின்றனர். இன்று காலையிலும் ஏராளமான வாகனங்களில் மக்கள் கொழும்பு நகருக்குள் வருவதைக் காண முடிந்தது.

இந்நிலையில், அதிபர் கோட்டாபய ராஜபக்சேவின் அதிகாரப்பூர்வ இல்லத்தை ஆயிரக்கணக்கானோர் முற்றுகையிட்டுள்ளனர். அவர்களைக் கலைக்கும் விதமாக காவல்துறையினர் அவர்கள் மீது கண்ணீர்ப்புகைக் குண்டுகளை வீசிவருகின்றனர்.
மேலும், மக்கள் போராட்டம் வலுத்ததை அடுத்து, அதிபர் மாளிகை பாதுகாப்பு பணியில் இருந்து போலீசாரும் விலகினர். அதிபர் மாளிகை உள்ளே போராட்டக்காரர்கள் நுழைந்ததாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டு உள்ளன.

இதனால், அதிபர் மாளிகையில் இருந்து கோத்தபய ராஜபக்சே தப்பி ஒடியதாக தகவல் வெளியாகி உள்ளது. மிகப்பெரிய போராட்டம் தலைநகர் கொழும்பு உள்ளிட்ட நாட்டின் பல பாகங்களில் நடைபெற்று வருகிறது.
மேலும், கோத்தபய ராஜபக்ச பத்தரமுல்லையில் உள்ள இராணுவத் தலைமையகத்தில் பதுங்கி இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.