இலங்கையில் 3 மாம்பழத்தை 10 லட்சம் ரூபாய்க்கு வாங்கிய தமிழர்! ஏன் தெரியுமா? கோவிலில் நடந்த அதிசயம்
இலங்கையில் 3 மாம்பழங்களை 10 லட்ச ரூபாய் கொடுத்து தமிழர் ஒருவர் ஏலத்தில் வாங்கிய சம்பவம் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
பல கோவில் திருவிழாக்களில் ஏலம் விடும் நிகழ்வு பாரம்பரியமாக நடைபெற்று வருகிறது.
அந்த வகையில் இலங்கையில் உள்ள விநாயகர் கோவிலில் சமீபத்தில் நடைபெற்ற ஏலத்தில் கலந்துகொண்ட தமிழர் ஒருவர் 3 மாம்பழங்கள் மற்றும் ஒரு மாலையை 10 லட்ச ரூபாய்க்கு வாங்கியிருக்கிறார்.
விநாயகர் கோவிலில் நடந்த ஏலம்
இலங்கையின் வவுனியா மாவட்டம் கணேசபுரம் பகுதியில் அமைந்துள்ளது சித்தி விநாயகர் கோவில்.
இங்கு அலங்கார திருவிழா உற்சவம் நடைபெற்று வருகிறது.
இந்த பகுதியில் மிகவும் பிரசித்திபெற்ற இந்த சித்தி விநாயகர் ஆலயத்தில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. அதில் விநாயகருக்கு மாம்பழ மாலை அணிவிக்கப்பட்டது.
அதன்பிறகு சாமி ஊர்வலம் நடைபெற்றிருக்கிறது. இறுதியாக பிள்ளையாருக்கு சாற்றிய மாம்பழம் மற்றும் மாலை ஆகியவை ஏலத்துக்கு வந்தது. இதை வாங்க ஏராளமானோர் போட்டிபோட்டனர்.
10 லட்ச ரூபாய்
ஆயிரங்களில் துவங்கிய இந்த ஏலம் லட்சக்கணக்கில் எகிறியது. 3 மாம்பழங்கள் மற்றும் மாலையை 10 லட்ச ரூபாய்க்கு உள்ளூர் தமிழரான மோகன்குமார் வாங்கியுள்ளார்.
கோவிலுக்கு ஏற்கனவே வேண்டுதல் இருந்ததால் அதன் காரணமாகவே இவ்வளவு தொகை செலவழித்து இதனை வாங்கியதாகவும் அவர் தெரிவித்திருக்கிறார்.
ஏலத்தில் பெற்றுக்கொண்ட ஒரு மாம்பழத்தை ஆலயத்தில் வைத்து, பக்தர்களுக்கு பகிர்ந்தளித்த பின்னர் ஏனைய இரண்டு மாம்பழங்களை வீட்டுக்கு எடுத்துச் சென்றிருக்கிறார் மோகன்குமார்.
மேலும், இந்த மாம்பழங்களின் விதைகளை தனது தோட்டத்தில் விதைத்திருப்பதாகவும் அவர் தெரிவித்திருக்கிறார். இலங்கையில் தற்போது உள்ள பொருளாதார நெருக்கடிகளுக்கு மத்தியில் 10 லட்ச ரூபாய்க்கு 3 மாம்பழங்களை அந்நாட்டு தமிழர் ஒருவர் வாங்கியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.