அசத்தல் சுவையில் காரசாரமான மிளகு சிக்கன் வறுவல்... பண்ணலாமா?
பொதுவாகவே விதவிதமாக சமைத்து சாப்பிடுவது என்றால் அனைவருக்குமே பிடிக்கும். சமையல் என்பது மனித இனத்துக்கு மட்டுமே கிடைத்த வரம் என்றால் மிகையாகாது.
அந்தவகையில், அசைவ பிரியர்களின் உணவுப்பட்டியலில் முக்கிய இடம்பிடிக்கும் சிக்கனை பூண்டு மிளகு சேர்த்து அசத்தல் சுவையில் காரசாரமான சிக்கன் வறுவலை எவ்வாறு செய்யலாம் என இந்த பதிவில் பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்
சிக்கன் - 500 கிராம்
மிளகாய் தூள் - 2 தே.கரண்டி
கரம் மசாலா - 1 தே.கரண்டி
மஞ்சள் தூள் - 1/2 தே.கரண்டி
மல்லித் தூள் - 2 தே.கரண்டி
தயிர் - 1/2 கப்
உப்பு - சுவைக்கேற்ப
நல்லெண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
பெரிய வெங்காயம் - 2 (பொடியாக நறுக்கியது)
கறிவேப்பிலை - சிறிது

வறுத்து பொடி செய்வதற்கு...
மிளகு - 2 மேசைக்கரண்டி
சோம்பு - 2 மேசைக்கரண்டி
செய்முறை
முதலில் சிக்கனை நன்றாக கழுவிக் கொள்ள வேண்டும். பின்னர் ஒரு பாத்திரத்தில் கழுவிய சிக்கனை எடுத்துக் கொண்டு, அத்துடன் மிளகாய் தூள், கரம் மசாலா, மஞ்சள் தூள், மல்லித் தூள் ஆகியவற்றை சேர்க்க வேண்டும்.
அதனையடுத்து அதில் 1/2 கப் கெட்டி தயிரை சேர்த்து, சுவைக்கேற்ப உப்பு தூவி நன்கு பிரட்டி, 10 நிமிடம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும்.

பின்னர் ஒரு அடுப்பில் வைத்து, அதில் நல்லெண்ணெய் ஊற்றி சூடானதும், பொடியாக நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து, பொன்னிறமாகும் வரையில் வதக்க வேண்டும்.
அதன் பின்பு அதில் ஊற வைத்துள்ள சிக்கனை சேர்த்து ஒருமுறை கிளறி விட்டு, மூடி வைத்து குறைவான தீயில் வைத்து 15 நிமிடம் வேக வைக்க வேண்டும்.

இதற்கிடையில், மற்றொரு அடுப்பில் மிளகு மற்றும் சோம்பு சேர்த்து வறுத்து இறக்கி, மிக்சர் ஜாரில் போட்டு நன்கு மென்மையாக அரைத்து பொடி செய்து கொள்ள வேண்டும்.
சிக்கன் நன்கு வெந்ததும், மூடியைத் திறந்து, அதில் அரைத்து வைத்துள்ள பொடியை சேர்த்து நன்கு கிளறி, கறிவேப்பிலைத் தூவி கிளறி, 10-15 நிமிடம் எண்ணெய் பிரிய வேக வைத்து இறக்கினால், அவ்வளவு தான் சுவையான பெப்பர் சிக்கன் தயார்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |