நொடியில் காலியாகும் காரசாரமான சிக்கன் ஊறுகாய்! பண்ணலாமா?
பொதுவாகவே அசைவ பிரியர்களின் விருப்பப்பட்டியலில் சிக்கன் முக்கிய இடம் வகிக்கின்றது. அந்தளவுக்கு சிக்கன் எல்லா உணவு வகைகளுடனும் அசத்தலாக சுவையை கொடுக்கக்கூடியது என்பதால் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரையில் சிக்கன் பிரியர்கள் ஏராளாம்.
அப்படி வீட்டில் உள்ள அனைவரையும் குஷியாக்கும் வகையில், காரசாரமான சுவையில் சிக்கன் ஊறுகாய் எப்படி செய்வதென இந்த பதிவில் பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்
எலும்புகள் இல்லாத சிக்கன் -300 கிராம்
மஞ்சள் தூள்- 1/2 தே.கரண்டி
மிளகாய் தூள்- 1 தே.கரண்டி + 1 தே.கரண்டி
உப்பு- தேவையான அளவு
நல்லெண்ணை - 1/4 கப் + சிறிதளவு
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 2 தே.கரண்டி
எலுமிச்சை சாறு - 2 மேசைக்கரண்டி

வறுத்து அரைக்க...
கடுகு -1/2 தே.கரண்டி
வெந்தயம்- 1/2 தே.கரண்டி
சீரகம்- 1 தே.கரண்டி
மல்லி -1 தே.கரண்டி
பட்டை- சிறிய துண்டு
ஏலம் -3
கராம்பு- 3
அன்னாசிப்பூ - 1

செய்முறை
முதலில் ஒரு பாத்திரத்தில் சிக்கன், மிளகாய் தூள் மஞ்சள் தூள் மற்றும் தேவையான அளவுக்கு உப்பு சேர்த்து 30 நிமிடங்கள் அப்படியே ஊறவிட வேண்டும்.
அதனையடுத்து வறுத்து அரைக்க கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை வாசனை வரும் வரையில் வறுத்து ஆறவிட்டு ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து நன்றாக அரைத்துக்கொள்ள வேண்டும்.
பின்னர் பாத்திரமொன்றை அடுப்பில் வைத்து சூடானதும், 1/4 கப் நல்லெண்ணை சேர்த்து ஊறவைத்த சிக்கனை போட்டு பொறுமையாக கோல்டன் பிரவுன் நிறத்துக்கு பொரித்து எடுத்துக்கொள்ள வேண்டும்.

அதன் பின்னர் அதே நல்லெண்ணையுடன் இன்னும் சிறிதளவு சேர்த்து, அதில் 1 தேக்கரண்டி மிளாய் தூள் மற்றும் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து நன்றாக வதக்கி பின்னர் பொரித்த சிக்கனையும் அதனுடன் சேர்த்து கலந்துவிட வேண்டும்.
அதனையடுத்து அரைத்து வைத்த மசாலா தூளையும் அதனுடன் சேர்த்து உயர் தீயில் நன்றாக வேவிட வேண்டும்.
இறுதியா எலுமிச்சை சாறு சேர்த்து நன்றாக கலந்துவிட்டு இறக்கினால் அவ்வளவு தான் அசத்தல் சுவையில் சிக்கன் ஊறுகாய் தயார்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |