மட்டன் மூளை வறுவல்... கிராமத்து ஸ்டைலில் எப்படி சமைப்பது?
மட்டன் மூளையில் வறுவல் செய்வது குறித்து இந்த பதிவில் விரிவாக தெரிந்து கொள்ளலாம்.
பொதுவாக உடல் ஆரோக்கியத்தில் அதிக பங்கு கொண்டுள்ள உணவுகள் என்றால் அசைவ உணவுகளும் ஒன்றாகும்.
அதிலும் மட்டன் என்றால் அசைவப் பிரியர்களுக்கு தனி பிரியம் தான். மட்டனில் குடல், ரத்தம், கல்லீரல், நுரையீரல், மண்ணீரல் கால், தலைக்கறி, மூளை என அனைத்து பாகங்களும் ஆரோக்கியம் நிறைந்தது ஆகும்.
இந்நிலையில் மட்டன் மூளையை கிராமத்து ஸ்டைலில் வறுவலாக சமைப்பது எப்படி என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
தேவையான பொருட்கள்:
ஆட்டு மூளை - 1
சின்ன வெங்காயம் - 5
பூண்டு - 3 பல்
மஞ்சள் தூள் - 1 சிட்டிகை
கொத்தமல்லி - சிறிது
தண்ணீர் - தேவையான அளவு
உப்பு - சுவைக்கேற்ப
அரைப்பதற்கு...
மல்லி விதைகள் - 1 டேபிள் ஸ்பூன்
கசகசா - 1 டீஸ்பூன்
மிளகு - 1/2 டீஸ்பூன்
சீரகம் - 1/2 டீஸ்பூன்
வரமிளகாய் - 1 தாளிப்பதற்கு.
எண்ணெய் - 2 டீஸ்பூன்
பட்டை - 1 துண்டு
கிராம்பு - 1
கறிவேப்பிலை - சிறிது
செய்முறை:
முதலில் மூளையை நன்றாக தண்ணீரில் போட்டு கழுவிக்கொள்ளவும். மூளை இடையே இருக்கும் சிவப்பு நரம்புகளை நீக்கிவிட்டு மஞ்சள் சேர்த்து பிரட்டி நீரில் கழுவி எடுக்கவும்.
பின்பு மூளையை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். அரைப்பதற்கு கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை மிக்ஸி ஜாரில் போட்டு அரைத்துக் கொள்ளவும்.
கடாயை அடுப்பில் வைத்து அதில் எண்ணெய், பட்டை, கிராம்பு, கறிவேப்பிலை சேர்த்து தாளிக்கவும். பின்பு வெங்காயம் மற்றும் பூண்டு சேர்த்து வதக்கவும்.
தொடர்ந்து நறுக்கி வைத்துள்ள மூளையை போட்டு 1 சிட்டிகை மஞ்சள் தூள் சேர்த்து பிரட்டி எடுக்கவும். பின்பு அரைத்து வைத்துள்ள மசாலா சேர்த்து, சிறிதளவு தண்ணீர் மற்றும் தேவையான உப்பு சேர்த்து 5 நிமிடம் குறைவான தீயில் வேக வைக்கவும்.
மசாலாவின் பச்சை வாசனையும், தண்ணீர் வற்றியதும் மல்லித்தழை தூவி இறக்கினால், சுவையான மூளை வறுவல் தயார்.
ஆட்டுமூளை வேகமாக வெந்துவிடும் என்பதால் நீண்ட நேரம் வைக்காமல் சீக்கிரமாக அடுப்பில் இருந்து இறக்கவும்.
அதே போன்று மூளை மிகவும் மென்மையாக இருப்பதால் சமைக்கும் போது, பார்த்து கையாளவும். காரம் தேவையெனில் 2 வரமிளகாய் சேர்த்துக் கொள்ளவும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |