மல்லிகை பூ மாதிரி இட்லி: இந்த 1 பொருள் மட்டும் போதும்
6 மாத குழந்தை முதல் 60 வயது முதியவர்கள் வரை அனைவருக்குமான உணவு என்றால் அது இட்லி தான், மருத்துவர்கள் பரிந்துரைக்கும் உணவும் கூட.
ஆவியில் வேகவைத்து எடுப்பதாலும் நம் உடலுக்கு பல ஆரோக்கிய நன்மைகளை அள்ளித்தருகிறது.
இந்த பதிவில் இட்லி மிருதுவாக பூ போன்று வருவதற்கு என்ன செய்யலாம் என்பது குறித்து தெரிந்து கொள்வோம்.
4 டம்ளர் இட்லி அரிசிக்கு 1 டம்ளர் உளுந்து என்பது தான் சரியான அளவு, அரிசியையும், உளுந்தையும் ஊறவைப்பதற்கு முன்பாக நன்றாக கழுவிவிட்டு குறைந்தது 3 மணிநேரமாவது ஊறவைத்து எடுத்துக் கொள்ளுங்கள்.
சவ்வரிசி
இட்லி அரிசி எடுத்த அதே டம்ளரில் பாதியளவு சவ்வரிசியையும் எடுத்துக்கொண்டு அதை 8 மணிநேரம் ஊறவைக்கவும்.
உளுந்து ஆட்டி முடித்த பின்னர், அரிசியுடன் சேர்த்து சவ்வரிசியையும் அரைக்கவும்.
உளுந்து, அரிசியை நன்றாக கலந்துவிட்டு பாத்திரத்தில் மூன்றில் ஒரு பங்காக இருக்கும்படி எடுத்து வைக்கவும், அப்போது தான் காலையில் இட்லி மாவு புளித்து வந்திருக்கும்.
தேவையான அளவு உப்பு சேர்த்து இட்லி பாத்திரத்தில் வைத்து அவித்து எடுத்தால் பூப் போன்ற இட்லி தயார்.
வெள்ளை அவல்
அரிசி எடுத்த அதே டம்ளர் அளவில் வெள்ளை அவல் எடுத்துக் கொள்ளலாம்,
கடினமான அவலாக இருந்தால் மாவு அரைப்பதற்கு அரைமணிநேரம் முன்பாக ஊறவைக்கவும், லேசானதாக இருந்தால் சிறிது நேரம் ஊறவைத்தாலே போதுமானது.
இதையும் அரிசி அரைக்கும் போது சேர்த்து அரைத்துக் கொள்ளலாம், வெள்ளை அவலுக்கு பதிலாக சிவப்பு அவலையும் பயன்படுத்திக் கொள்ளலாம்.
சிறிது வெந்தயம் சேர்த்து அரைத்தாலும் இட்லி பஞ்சு போன்று வரும். மிக முக்கியமாக அரைக்கும் போது குளிர்ந்த நீரை பயன்படுத்தவும்.
