சூப்பரான நத்தை வறுவல்! இப்படி செஞ்சு பாருங்க.. சுவையாக இருக்குமாம்
பொதுவாக கிராமங்களிலும் பழங்குடியினரும் நத்தை கறியை மழைக் காலங்களில் தவிர்க்காமல் எடுத்து கொள்கிறார்கள்.
100 கிராம் நத்தையில் 3.5 மில்லி கிராம் அயர்ன் கிடைக்கிறது. இது மாட்டுக் கறியில் கிடைப்பதை விட அதிகம் என்று சொல்லப்படுகின்றது.
உடலுக்கு தேவையான இரும்பு சத்து, புரதச்சத்து, ஒமேகா – 3, வைட்டமின் B12 போன்ற சத்துக்கள் உள்ளன.
அந்தவகையில் தற்போது நத்தையை வைத்து சூப்பரான நத்தை வறுவல் ஒன்றை எப்படி செய்யலாம் என்று பார்ப்போம்.
தேவையான பொருட்கள்
- நத்தை - அரை கிலோ
- இஞ்சி, பூண்டு விழுது - 1 டீஸ்பூன்
- வெங்காயம் - 2
- தக்காளி - 1
- ப.மிளகாய் - 3
- மஞ்சள் தூள் - கால் டீஸ்பூன்
- கரம் மசாலா - அரை டீஸ்பூன்
- மிளகாய்த் தூள் - 1 டீஸ்பூன்
- கொத்தமல்லி, கறிவேப்பிலை - தேவையான அளவு
- தேங்காய் துருவல் - 4 டீஸ்பூன்
- உப்பு, எண்ணெய் - தேவையான அளவு
செய்முறை
நத்தைகளை உயிரோடு பிடித்து வந்து கொதிக்க வைத்த நீரில் சற்று நேரம் போட்டு வைத்த பின் அது இறந்த பிறகு ஓடுகளை உடைத்து நத்தையின் கறியை தனியாகப் பிரித்தெடுத்து நல்ல தண்ணீரில் இரண்டு, மூன்று முறை நன்கு அலசி கொள்ள வேண்டும்.
வெங்காயம், ப.மிளகாய், தக்காளி, கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தை அடுப்பை வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் பெரிய வெங்காயம், பச்சை மிளகாய் போட்டு நன்றாக வதக்கவும். வெங்காயம் நன்றாக வதங்கியதும் இஞ்சி, பூண்டு விழுது சேர்த்து வதக்கவும். இஞ்சி, பூண்டு பச்சை வாசனை போனவுடன் தக்காளியை சேர்த்து தக்காளி குழைய வதக்கவும்.
அடுத்து அதில் மஞ்சள் தூள், கரம் மசாலா, மிளகாய்த் தூள் சேர்த்து நன்கு கிளறவும். அடுத்து நத்தை கறியினை சேர்த்து நன்றாக வதக்கவும்.
நத்தை கறியின் அளவுக்கு ஏற்ப தண்ணீர் விட்டு கறியை நன்கு வேக விடவும்.
அடுத்து அதில் தேங்காய் துருவல் சேர்த்து கிளறவும்.
கறி நன்கு வெந்து ஓரங்களில் எண்ணெய் பிரிந்து தண்ணீர் வற்றியதும் கொத்தமல்லி தூவி இறக்கினால் நத்தை வறுவல் தயார்.