பல துயரங்களைத் தாங்கி இசையில் சாதித்தவர் ஜானகி – இளையராஜா வெளியிட்ட உருக்கமான இரங்கல்
புகழ்பெற்ற பாடகி ஜானகி அம்மாவின் மறைவு செய்தி கேட்டு மிகுந்த வேதனை அடைந்ததாக இசையமைப்பாளர் இளையராஜா தனது இரங்கலை தெரிவித்து காணொளியொன்றை வெளியிட்டுள்ளார்.
அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்து, தனது எக்ஸ் தளப் பக்கத்தில் வெளியிட்ட வீடியோவில் இளையராஜா உருக்கமாக பேசியுள்ளார்.

இளையராஜாவின் உருக்கமான பதிவு
அதில் அவர், “மதிப்பிற்குரிய பாடகி ஜானகி அம்மா காலமான செய்தி மிகவும் அதிர்ச்சியையும், ஆழ்ந்த துயரத்தையும் ஏற்படுத்தியது.
தனது சொந்த வாழ்க்கையில் தாங்க முடியாத பல துயரங்களையும், வேதனையான நிகழ்வுகளையும் எதிர்கொண்டு அவர் வாழ்ந்தார் என்பது மிகவும் வருத்தமளிக்கும் விஷயம்” என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும், உலகின் பல தலைசிறந்த இசையமைப்பாளர்கள் மற்றும் கலை மேதைகளின் தனிப்பட்ட வாழ்க்கையிலும் பல்வேறு துயரங்கள் நிறைந்திருந்ததாகக் கூறிய இளையராஜா, ஜானகி அம்மாவின் இசைத் திறமையைப் பாராட்டினார்.
“ஒவ்வொரு பாடலிலும் தனது அபாரமான திறமையை அவர் நிரூபித்துள்ளார். எந்தப் பாடலாக இருந்தாலும் அதை சிறப்பாக வெளிப்படுத்துவதற்காக அவர் மிகவும் கடினமாக உழைப்பார்.

நான் ஒரு பாடலை எப்படி சிறப்பாக உருவாக்க வேண்டும் என்று நினைத்து உழைப்பேனோ, அதே அளவுக்கு அதைவிட அதிக அர்ப்பணிப்புடன் பாடலை மெருகேற்றுவார்.
அவரது உழைப்பு ஈடு இணையற்றது” என்று இளையராஜா தெரிவித்துள்ளார். பாடகி ஜானகியின் மறைவு இந்திய இசை உலகிற்கு மிகப்பெரிய இழப்பு என்றும், அவரது குரலும், இசைப் பங்களிப்பும் என்றும் நினைவுகூரப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.
“அவரது ஆன்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறேன்” என தனது இரங்கல் செய்தியில் இளையராஜா தெரிவித்துள்ளார்.
— Ilaiyaraaja (@ilaiyaraaja) July 12, 2026
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |