அரை நிர்வாண நிலையில் ஆன்லைன் பாடம்! ஆசிரியருக்கு சிறை
சென்னை கே.கே.நகர் பத்மா சேஷாத்ரி பள்ளியில் பணிபுரியும் ராஜகோபாலன் என்ற ஆசிரியர், மாணவிகளிடம் தொடர்ந்து பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட புகாரில் கைது செய்யப்பட்டுள்ளார்.
சென்னை கே.கே.நகரில் நடிகர் ஒய்.ஜி.மகேந்திரனின் தாயார் உருவாக்கிய பத்மா சேஷாத்ரி பால பவன் என்ற சி.பி.எஸ்.இ. மேல்நிலைப்பள்ளி இயங்கி வருகிறது.
இங்கு வணிகவியல் ஆசிரியராக உள்ள ராஜகோபாலன் என்பவன், தன்னிடம் பயிலும் மாணவிகளிடம் ஆபாசமாக பேசுவது, இரட்டை அர்த்தத்தில் பேசுவது போன்ற சில்மிஷங்களில் ஈடுபட்டு வருவதாக புகார் எழுந்தது.
சில மாணவிகளிடம் செல்போன் எண்களைப் பெற்று அவர்களுக்கு வீடியோ கால் செய்வது போன்ற தொந்தரவுகளிலும் ராஜகோபாலன் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் பள்ளியில் பயிலும் மாணவி ஒருவர், ராஜகோபாலனின் பாலியல் அத்துமீறல்கள் தொடர்பாக சமூக வலைதளங்களில் துணிச்சலுடன் பதிவிட்டார்.
இந்த விவகாரம் விஸ்வரூபம் எடுத்ததை அடுத்து, பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத் தடுப்பு பிரிவு காவல் துணை ஆணையர் ஜெயலஷ்மி பள்ளிக்கு நேரில் சென்று விசாரணை நடத்தினார்.
பின்னர், நங்கநல்லூரில் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்த ராஜகோபாலன் மற்றும் அவரது தாய், மனைவி ஆகிய மூவரும் வடபழனி காவல்நிலையத்திற்கு அழைத்துவரப்பட்டு விசாரணை நடத்தப்பட்டது.
தற்போது போஸ்கோ சட்டத்தின் கீழ் 5 பிரிவுகளின் வழக்கு தொடரப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார் ராஜகோபாலன்.