கிராமத்து பாணியில் காரசாரமான மத்தி மீன் குழம்பு... பண்ணலாமா?
அசைவ உணவுகளை விரும்புபவர்களுக்கு மீன் குழம்பு என்றாலே தனி விருப்பம் இருக்கும். அதிலும் கிராமத்து பாணியில் வீட்டிலேயே அரைத்த மசாலாக்களுடன் தயாரிக்கப்படும் மீன் குழம்பின் சுவையை வார்த்தைகளால் சொல்ல முடியாது.
அதன் மணமும், காரசாரமான சுவையும் சாப்பிடும் அனைவரையும் மீண்டும் மீண்டும் சுவைக்கத் தூண்டும். குறிப்பாக மத்தி மீன் தமிழர்களின் பாரம்பரிய உணவில் முக்கிய இடத்தைப் பெற்றுள்ளது.

அளவில் சிறியதாக இருந்தாலும், இதில் நிறைந்துள்ள ஊட்டச்சத்துக்கள் மற்றும் மருத்துவ குணங்கள் இதனை மிகவும் சிறப்பான மீனாக மாற்றுகின்றன.
மத்தி மீனில் சுமார் 270 IU அளவிற்கு வைட்டமின் டி காணப்படுவதுடன், உடலுக்குத் தேவையான பல்வேறு சத்துக்களும் நிறைந்துள்ளன.
இதில் வைட்டமின் டி, பொட்டாசியம், நியாசின், செலீனியம், வைட்டமின் பி12, அயோடின் மற்றும் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் போன்ற முக்கிய ஊட்டச்சத்துக்கள் அதிகளவில் உள்ளன. இவை எலும்புகளின் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதோடு, இதய நலனுக்கும் மூளை வளர்ச்சிக்கும் பெரிதும் உதவுகின்றன.

குறைந்த விலையிலும் அதிக சத்துக்களை வழங்கும் மத்தி மீனை உணவில் அடிக்கடி சேர்த்துக்கொள்வது ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது.
இவ்வளவு ஆரோக்கிய நன்மைகள் நிறைந்த சத்தான மத்தி மீனை வைத்து கிராமத்து பாணியில் அசத்தல் மீன் குழம்பு செய்வது எப்படி என்பதைப் பார்ப்போம்.
தேவையான பொருட்கள்
மத்தி மீன் – ½ கிலோ
எண்ணெய் – 3 மேசைக்கரண்டி
கடுகு – 1 தேக்கரண்டி
சீரகம் – 1 தேக்கரண்டி
வெந்தயம் – 1 தேக்கரண்டி
சின்ன வெங்காயம் – 100 கிராம்
தக்காளி – 3
புளி – சிறிதளவு
உப்பு – தேவையான அளவு
மஞ்சள் தூள் – ½ தேக்கரண்டி
பச்சை மிளகாய் – 2
மிளகாய்த்தூள் – ½ தேக்கரண்டி
மல்லித்தூள் – 3 தேக்கரண்டி
கருவேப்பிலை – 1 கொத்து
அரைத்த தேங்காய் பேஸ்ட் – 50 கிராம்

செய்முறை
முதலில் மத்தி மீனை நன்றாக சுத்தம் செய்து கழுவி தனியாக வைத்துக்கொள்ளவும். பின்னர் ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, சீரகம் மற்றும் வெந்தயம் சேர்த்து தாளிக்கவும்.
அதன் பின்னர் பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயத்தை சேர்த்து பொன்னிறமாகும் வரை வதக்க வேண்டும்.
வெங்காயம் நன்றாக வதங்கியதும் நறுக்கிய தக்காளி, பச்சை மிளகாய் மற்றும் கருவேப்பிலை சேர்த்து தக்காளி மென்மையாகும் வரை நன்றாக வதக்கவும்.
பிறகு மஞ்சள் தூள், மிளகாய்த்தூள், மல்லித்தூள் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து மசாலாவின் பச்சை வாசனை போகும் வரை கிளறி வதக்க வேண்டும்.

இதனுடன் புளிக்கரைசலை சேர்த்து, அரைத்த தேங்காய் பேஸ்டையும் கலந்து தேவையான அளவு தண்ணீர் ஊற்றி நன்றாக கலக்கவும். இந்த கலவையை சுமார் 5 நிமிடங்கள் கொதிக்கவிட வேண்டும்.
குழம்பு நன்றாக கொதித்ததும் சுத்தம் செய்து வைத்துள்ள மத்தி மீனை அதில் சேர்க்கவும். மீன் உடையாமல் இருக்க மெதுவாக ஒருமுறை மட்டும் கிளறி, பாத்திரத்தை மூடி மிதமான தீயில் 10 நிமிடங்கள் வேகவிடவும்.
மீன் நன்றாக வெந்ததும் அடுப்பை அணைத்து சிறிது நேரம் ஆறவிட்டு எடுத்தால், மணமும் சுவையும் நிறைந்த ஆரோக்கியமான கிராமத்து மத்தி மீன் குழம்பு தயார்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |