வால்பாறை அருகே 15 வயது சிறுமியை கர்ப்பமாக்கிய 17 வயது சிறுவன் போக்சோ சட்டத்தின் கீழ் கைது!
கோவை மாவட்டம், வால்பாறை பாகுதியை சேர்ந்தவர் 15 வயது சிறுமி. இவருக்கு நேற்று முன்தினம் திடீரென வயிற்று வலி ஏற்பட்டது. இதனையடுத்து, சிறுமியை வால்பாறை அரசு மருத்துவமனைக்கு பெற்றோர் அழைத்துச் சென்றார்கள். அங்கு அச்சிறுமிக்கு மருத்துவர்கள் பரிசோதனை செய்தனர்.
அந்த பரிசோதனையில் சிறுமி கர்ப்பமாக இருப்பது கண்டு பெற்றோர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதனை அடுத்து, மருத்துவமனை சார்பில் பொள்ளாச்சி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது.
உடனே சம்பவ இடத்திற்கு போலீசார் விரைந்து வந்து சிறுமியிடம் விசாரணை நடத்தினர். அப்போது, போலீசார் நடத்திய விசாரணையில் அச்சிறுமிக்கும், அவரது வீட்டின் அருகே வசிக்கும் 17 வயது சிறுவனுடன் பழக்கம் இருந்து வந்தது தெரியவந்தது.
அவர் திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கர்ப்பமாக்கியது தெரியவந்தது. இதனையடுத்து, போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிந்த போலீசார் அச்சிறுவனை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
