பல பேர் பலவிதமாக பேசினார்கள்... மனமுடைந்து தற்கொலைக்கு முயன்றேன்- ரோபோ சங்கர்
மனமுடைந்து தற்கொலைக்கு முயற்சி செய்ததாக நடிகர் ரோபோ சங்கர் மனம் திறந்து பேசியுள்ளார்.
நடிகர் ரோபோ சங்கர்
பிரபல விஜய் டிவியில் ஒளிபரப்பான ‘கலக்கப்போவது யாரு’ நிகழ்ச்சி மூலம் மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றவர்தான ரோபோ சங்கர். இந்நிகழ்ச்சி மூலம் அவருக்கு சினிமாவில் நடிக்க அடுத்தடுத்து வாய்ப்புகள் கிடைத்தது. பல முன்னணி நடிகர்களுடன் நடித்து சிறந்து விளங்கினார் ரோபோ சங்கர்.
இந்நிலையில், சென்னையை அடுத்த ராமாபுரத்தில் தனியார் கல்லூரி வளாகத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் மது பழக்கத்திற்கு எதிராக சில வசனங்கள் கொண்ட பதாகைகளை கையில் ஏந்தியவாறு பேரணியில் கலந்து கொண்டனர்.
மனம் திறந்து பேசிய ரோபோ சங்கர்
இந்த பேரணியில் நடிகர் ரோபோ சங்கர் கலந்து கொண்டார். அப்போது அவர் பேசுகையில்,
சமீப காலமாக எங்கு பார்த்தாலும் என்னைப் பற்றி செய்திதான் ஓடிக்கொண்டிருக்கிறது. என் புகைப்படம் சமூகவலைத்தளங்களில் வெளியானபோது, என் உடல் எடையை குறித்து பல பேர், பலவிதமாக பேசினார்கள்.
ஆனால், நான் மஞ்சள் காமாலை நோயால் பாதிக்கப்பட்டேன். 5 மாதங்களாக நான் படுத்த படுக்கையாகவிட்டேன். சொல்லப்போனால் மரண விளிம்பில் கூட சென்று வந்து விட்டேன். இதற்கெல்லாம் காரணம் என்னிடம் இருந்த கெட்ட பழக்கம்தான். நான் அளவுக்கு அதிகமாக மது பழக்கம் கொண்டவன்.
கடந்த 5 மாதங்களாக என்னால் மது அருந்தாமல் இருக்கவே முடியவில்லை. இரவில் எழுந்து ஒரு பைத்தியக்காரன் போல் திரிந்தேன். தற்கொலை செய்து கொள்ளக்கூட முயற்சி செய்தேன்.
இதனால் வீட்டில் இருந்தவர்களுக்கு நிம்மதி இல்லை. அப்போதுதான் என் நிலைமை அறிந்த நக்கீரன் கோபால் சார் என்னை ஒரு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார்.
அப்போது, என்னிடம் மருத்துவர்கள், என் உடலில் மஞ்சள் காமாலை நோயால் என் உடல் உறுப்புகள் பாதிக்கப்பட்டதை பற்றி விளக்கினார்கள். என் குடும்பத்தினர் என்னை நன்றாக பார்த்துக் கொண்டதால், தற்போது நான் நல்லபடியாக தேறி வந்துள்ளேன் என்றார்.
தற்போது இது தொடர்பான வீடியோ இணையதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. இந்த வீடியோவைப் பார்த்த அவரது ரசிகர்கள் அவர் உடல் நலம் பெற வேண்டிய வாழ்த்துக்களை தெரிவித்து கமெண்ட் செய்து வருகின்றனர்.