உண்மையில் புதிதாக வாங்கும் ஸ்மார்ட் போனுக்கு எவ்வளவு RAM தேவை?
இன்றைய நவீன உலகில் ஸ்மார்ட்போன் இல்லாத நபர்களையே காண முடியாது. அதிலும் ஆண்ட்ராய்டு போன்களின் ரேம் 4ஜிபி முதல் 22ஜிபி வரை விற்கப்படுகிறது. பொதுவாக, குறைந்த விலையுள்ள போன்கள் சிறிய அளவிலான ரேம்களை கொண்டிருக்கும், அதே சமயம் பிரீமியம், பிளாக்ஷிப் போன்கள் அதிகமான ரேம் மெமரியைக் கொண்டதாக இருக்கும்.
புதிய போன் வாங்கும் போது உங்களுக்கு எவ்வளவு ரேம் தேவை என்ற கேள்வி எப்போதும் எழும். இந்த நேரத்தில் 2022-ல் ஆண்ட்ராய்டு போனுக்கு ஏற்ற ரேம் அளவு என்ன? எதிர்காலத்தை கணக்கிட்டு ரேம் வகைகளை தேர்ந்தெடுப்பது எப்படி என்பதை பற்றி தெரிந்துகொள்வோம்.
நீங்கள் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போனில் ஒரு புதிய செயலியை நிறுவி பயன்படுத்தும்போது, அது ரேம் மெமரியின் ஒரு பகுதியை ஆக்கிரமிக்கும். அதேப்போல் சிறிய கேம்கள் விளையாடும் போது, அதிநவீன கேம்கள் ஒரு ஜிகாபைட் வரை ரேம் மெமரியைப் பயன்படுத்தக்கூடும்.
தற்போது அதிகம் விரும்பி விளையாடும் கேம்கள் 1.5ஜிபி வரை ரேம் மெமரியைப் பயன்படுத்துகின்றன. 4ஜிபி ரேம் கொண்ட ஸ்மார்ட்போன்களுக்கு இது பெரும் பிரச்னையாக மாறும். ரேம் மெமரியில் இடம் இல்லை என்றால், ஸ்மார்ட்போன்கள் வேகமாக வேலை செய்யாது.
இந்த குறையை போக்கவே Swap Space பயன்படுத்தப்படுகிறது. அதாவது, நாம் பயன்படுத்தும் செயலிகளின் பழைய தரவுகள் இந்த ஸ்வாப் மெமரியில் சேமிக்கப்படும். 4ஜிபி ரேம் + 64ஜிபி சேமிப்பகத்தை கொண்ட ஸ்மார்ட்போனில், 64ஜிபியில் பயன்படுத்தாத மெமரி, இந்த ஸ்வாப் ஸ்பேஸாக பயன்படுத்தப்படும்.
மேலும், இந்த ஸ்வாப் ஸ்பேஸில் இருக்கும் மெமரி தேவைப்பட்டால், ரேம் உடனடியாக அதனை உள்வாங்கிக் கொள்ளும். இதோடு, உங்களிடம் அதிக ரேம் இருந்தால், பழைய பயன்பாடுகளை Android அழிக்காமல் நினைவகத்தில் சேமித்து வைத்திருக்கும்.
மேலும், ஸ்வாப் மெமரி இருந்தாலும், ரேமின் அளவு அதிகமாக இருந்தால், வேகமாக நம் ஸ்மார்ட்போன்களை அணுக முடியும் என்பதே உண்மை. தற்போதைய நிலையில், சில நிறுவனங்கள் 8-ஜிபி ரேம் மெமரி உடன், 4ஜிபி நீட்டிக்கப்பட்ட மெமரியையும் (Extended Memory) வழங்குகின்றன.
எவ்வளவு ரேம் தேவை?
4-ஜிபி என்ற சராசரி ரேம் அளவு தற்போதையை சூழலில், பல பணிகளை மேற்கொள்ள போதுமானதாக இல்லை என்பது தெளிவாகத் தெரிகிறது. குறைந்தது 6ஜிபி ரேம் அளவு உங்களுக்கு ஏற்றதாக இருக்கும்.
அப்படி என்றால் 16ஜிபி, 22ஜிபி ரேம் மெமரி கொண்ட ஸ்மார்ட்போன்கள் சிறந்ததாக இருக்குமா என்றால், அது தான் இல்லை. ஒரு ரேமின் தேவையானது 6-ஜிபி முதல் 12-ஜிபி வரையில் இருந்தாலே போதுமானது.
பெரிய ரேம்கள் பேட்டரியை இரையாக்கும். 16, 18, 22 ரேம் என்ற வகைகள் நிறுவனங்களின் எண் விளையாட்டுகள் தான். இதனைக் கொண்டு அவர்கள் நிறுவனத்துக்கு பெயர் வாங்க காரணமான ஒன்று.
அப்படிப்பட்ட ஆப்பிள் நிறுவனத்தின் திறன்மிகு ஸ்மார்ட்போன்கள், 3-ஜிபி ரேம் அளவை தற்போதும் கொண்டுள்ளது. எனவே, அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு என்பது போல, தேவையான ரேம் அளவை தேர்தெடுப்பதே சிறந்ததாக இருக்கும்.