கால்சியம் சத்து நிறைந்த கேழ்வரகு தோசை! எலும்புகளை வலுவாக்கும்
சிறுதானிய உணவுகளில் மிக முக்கியமான கேழ்வரகு, மற்ற தானியங்களை விட அதிகளவு கால்சியம் கொண்ட கேழ்வரகில் இரும்புச்சத்து, நார்ச்சத்து உட்பட இன்னும் பல நன்மைகள் அடங்கியுள்ளன.
6 மாத குழந்தைக்கு கூட அறிமுக உணவாக கேழ்வரகை கொடுக்கலாம், ரத்தச்சோகை நீங்கவும், எலும்புகள் பலப்படவும், தாய்ப்பால் அதிகம் சுரக்கவும், சர்க்கரை நோயாளிகளுக்கும் ஏற்ற உணவு கேழ்வரகு.
இதனை கூழாகவோ, இட்லி, தோசை வடிவிலோ, புட்டாகவோ, கொழுக்கட்டையாகவோ எடுத்துக் கொள்ளலாம்.
இந்த பதிவில் கேழ்வரகு தோசை செய்வது எப்படி என தெரிந்து கொள்வோம்.
தேவையான பொருட்கள்
கேழ்வரகு- 3 கப்
இட்லி அரிசி- 1 கப்
உளுந்து- 1 கப்
வெந்தயம்- சிறிதளவு
செய்முறை
முதலில் கேழ்வரகு, அரிசியை நன்றாக கழுவிவிட்டு, சுமார் 8 மணிநேரம் ஊறவைக்கவும், கேழ்வரகை 6 லிருந்து 7 முறை கழுவி எடுத்துக்கொள்ளவும், அப்போது தான் அதிலிருக்கும் கழிவுகள் நீங்கும்.
உளுந்து மற்றும் வெந்தயத்தை நன்றாக கழுவி வி்ட்டு, 3 மணிநேரம் ஊறவைத்தாலே போதுமானது.
தோசை மாவு ஆட்டுவதற்கு முதலில் உளுந்து மற்றும் வெந்தயத்தை ஆட்டிக்கொள்ளவும், சிறிது மாவை எடுத்து தண்ணீரில் போட்டு மாவு மிதக்கும், சுமார் 15 முதல் 20 நிமிடங்கள் வரை ஆட்டினால் உளுந்து நன்றாக பொங்கி வரும்.
இதனை தனியாக எடுத்து வைத்துக் கொண்டு, கேழ்வரகு, அரிசியை ஆட்டவும், கேழ்வரகின் தோல் தனியாக ஒதுங்கி வைத்தால் நன்றாக தள்ளிவிட்டு ஆட்டவும்.
இதனை ஏற்கனகே ஆட்டி வைத்துள்ள உளுந்து மாவுடன் சேர்க்கவும், தேவையான அளவு உப்பு சேர்த்து கிளறிவிட்டு அப்படியே 8 மணிநேரம் புளிக்கவிடவும்.
அதன்பின் தோசை கல்லை சூடாக்கி, சிறிது நல்லெண்ணெய் ஊற்றி தோசை ஊற்றி எடுத்தால் சுவையான கேழ்வரகு தோசை தயார்!!!